“கனவு நிறைவேறிய நாள் இன்று” – ரஜினிகாந்துடனான சந்திப்பு குறித்து டிராகன் பட இயக்குநர் நெகிழ்ச்சி!

ரஜினிகாந்துடனான சந்திப்பு குறித்து டிராகன் பட இயக்குநர் நெகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்

அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம்  ‘டிராகன்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில்  ரங்கநாதன், கயாடு லோஹர்,  அனுபமா பரமேஸ்வரன், கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின், சிநேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார்.

இப்படம் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று மூன்று நாட்களைக் கடந்துள்ளது. இந்த நிலையில் படத்தில் வசூல் விவரம் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி எக்ஸ் தளப் பதிவில் புதிய போஸ்டரை வெளியிட்டார். அதில்,  ‘கதற கதற பிளாக்பஸ்டர்’ என்று குறிப்பிடப்பட்டதோடு, இப்படம் உலகளவில் 3 நாட்களில் மட்டும் 55.22 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 10வது நாள் வசூல் குறித்து சில தினங்களுக்கு முன்பு படக்குழு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி இந்தியா முழுவதும் இப்படம் ரூ.100கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது. சினிமா ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் ஆகியோர் டிராகன் திரைப்படத்தை பார்த்து வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் டிராகன் திரைப்படத்தை பார்த்துவிட்டு அப்படத்தின் இயக்குநரான அஸ்வத் மாரிமுத்துவை அழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது..

” நல்ல படம் பண்ணனும், படத்த பாத்துட்டு ரஜினி சார் வீட்டுக்கு கூப்பிட்டு Wish பண்ணி நம்ம படத்த பத்தி பேசணும்!! இது டைரக்டர் ஆகணும்னு கஷ்டப்பட்டு உழைக்குற ஒவ்வொரு அசிஸ்டண்ட் டைரக்டரோட கனவு! கனவு நிறைவேறிய நாள் இன்று” என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.