ரத்தன் டாடாவின் மறைவுக்கு அவரது இளம் நண்பரும், உதவியாளரும், டாடா அலுவலகத்தின் பொது மேலாளருமான சாந்தனு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல தொழிலாளர்களில் ஒருவரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா நேற்று உயிரிழந்தார். இவரின் மறைவு அவரது குடும்பத்தை மட்டுமின்றி உலக மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் ஒரு தொழிலதிபராக மட்டுமின்றி, மனிதநேயமிக்க மனிதராகவும் செயல்பட்டவர்தான் ரத்தன் டாடா. தனது வருமானத்தில் பாதியை அறக்கட்டளைகளுக்கு வழங்கியவர். தற்போது இந்த மனிதநேய பண்பாளரின் மறைவுக்கு அவரது உறவினர்கள், குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என நாடே கண்ணீர் வடிக்கிறது.
இந்நிலையில் அவரது உதவியாளரும், டாடா அலுவலகத்தின் பொது மேலாளருமான சாந்தனு நாயுடு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இவரது இரங்கல் பொதுமக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. யார் இந்த சாந்தனு நாயுடு? பெரும் தொழிலதிபரான ரத்தன் டாடாவிற்கும், இவருக்கும் எவ்வாறு பழக்கம் ஏற்பட்டது?

டாடா செய்திகளில் வருவது இயல்பு தான் என்றாலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் ஒன்று மிகுந்த பேசுபொருளானது. காரணம், அதில் டாடாவுடன் இருந்த இளைஞர். யார் அந்த இளைஞர் என்ற பேச்சுக்கள் எழுந்தன. அப்போதுதான், சாந்தனு நாயுடு டாடாவின் உதவியாளர், அதையும் தாண்டி ஓர் இளம் நண்பர் என்று அறிமுகமானார்.
அதன் பின்னர் சாந்தனு நாயுடு பற்றி பல செய்திகள் வெளிவந்தன. சாந்தனு நாயுடு மே 2022-ல் இருந்து தான் ரத்தன் டாடாவுடன் பணியாற்றத் தொடங்கினார். ஆனால் வெகு விரைவிலேயே அவர் டாடாவின் நெருங்கிய வட்டாரத்தில் மிகவும் மதிப்புக்குரிய நபராக மாறினார். இதுதான் அவரைச் சுற்றி பல செய்திகள் வெளிவரக் காரணமாகியது.

புனேவில் பிறந்த சாந்தனு நாயுடு, சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றார். தொடர்ந்து, கார்னெல் ஜான்சன் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் எம்பிஏ பட்டமும் பெற்றார்.
ரத்தன் டாடா எவ்வாறு செல்லப்பிராணிகள் மீது அன்பு கொண்டவரோ அதுபோல சாந்தனுவும் செல்லப் பிராணிகள் மீது அன்பு கொண்டவர். இதுவே இவர்கள் இணைய முக்கிய காரணமாக அமைந்தது. சாந்தனு டாடா குழுமத்தில் பணியில் சேர்ந்த சமயத்தில், சாலை விபத்துகளில் இருந்து தெரு நாய்களைப் பாதுகாக்க ஒரு திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார். இரவில் ஒளிரும் ஒளிப்பட்டைகளை உருவாக்கி, தன்னால முடிந்த அளவு தனது கண்ணில் படும் நாய்களுக்கு மாட்டி விட தொடங்கினார்.

இந்த செயல் தான் ரத்தன் டாடா உடன் சாந்தனு இணைய காரணமா அமைந்தது. 25 வயது இளைஞரின் செயலை கண்டு வியந்த ரத்தன் டாடா, எப்போதும் சாந்தனுவை தன்னுடனேயே இருந்து அனைத்தையும் கவனித்துக் கொள்ளும்படி கூறினார். அவருக்கு அந்த இளைஞனே அனைத்து வெறுமையையும் போக்கிய ஒருவராய் இருக்கிறார், என்பது ரத்தன் டாடாவின் கடந்த பிறந்தநாள் நிகழ்வின் மூலம் தெரியவந்தது.
ரத்தன் டாடாவின் மறைவு குறித்து சாந்தனு கூறியுள்ளதாவது:
“இந்த நட்பு என்னுடன் விட்டுச்சென்ற வெற்றிடத்தை வாழ்நாள் முழுவதும் நிரப்ப முயற்சித்துக் கொண்டிருப்பேன். துக்கம் என்பது காதலுக்கு கொடுக்கவேண்டிய விலை. சென்றுவாருங்கள், எனது கலங்கரை விளக்கமே!” என தனது லிங்க்ட் இன் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.







