இந்தியாவிலேயே சிறந்த காவல் துறை தமிழக காவல் துறை என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு புகழாரம் சூட்டினார்.
தமிழக காவல் துறைக்கு ஜனாதிபதி கொடி வழங்கி கெளரவிக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் இந்தக் கொடியை வெங்கய்ய நாயுடு வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
என் மனதில் சென்னைக்கு என்றும் தனி இடம் உண்டு. இந்தியாவிலேயே சிறந்த காவல்துறை தமிழ்நாடு காவல்துறை என்று சொல்வதில் எனக்கு தயக்கமில்லை. தமிழ்நாடு காவல்துறையின் வரலாற்றில் இது முக்கியமான நாள். ஒவ்வொரு தமிழருக்கும் இது மகிழ்ச்சியான நாள்.
Elite States வரிசையில் தமிழ்நாடும் இணைந்துள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் வரவேற்பைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மிகப்பெரிய கடலோர பாதுகாப்பு கட்டமைப்பைக் கொண்டுள்ளது தமிழ்நாடு.
உயிரிழப்புகள், போதைப்பொருளை தடுப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது தமிழ்நாடு காவல்துறை. காவலர்களுக்கு குடியிருப்புகள் உருவாக்கித்தரப்பட்டுள்ளன. இது சிறப்புக்குரியது. காவலர்கள் மகிழ்ச்சியாக, மன வருத்தமின்றி பணியாற்றும் சூழல் காணப்படுகிறது.
காவல் துறையை நவீனமயமாக்கும் நடவடிக்கைகளிலும் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது.
சமூக-பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, சட்டம் – ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அனைத்து காவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.
வளங்களை உருவாக்குவதும், உடல்நலத்தை பாதுகாப்பதும் மிகவும் முக்கியம். பொதுமக்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே நமது லட்சியம்.
பொதுமக்களுக்கும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு தருவதே காவல்துறையின் பணி.
இந்தியாவிலேயே அதிகளவிலான மகளிர் காவல் நிலையங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன.
மகளிர் காவலர்களைக் கொண்டு வந்து பாலின சமத்துவத்தை உருவாக்குவதில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதன் மூலம், நல்ல வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது தமிழ்நாடு.
46 சைபர் கிரைம் காவல் நிலையங்களுடன் தனி சைபர் கிரைம் விங் அமைக்கப்பட்டுள்ளது. இது சிறந்த திட்டம்.
இந்தியாவிலேயே ஒரே மாநிலமாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உள்ள மாநிலம் தமிழ்நாடு.
தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கிறது. அண்மையில் பல சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன என்றார் வெங்கய்ய நாயுடு.








