நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைபாளர் சீமான், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பின்னர் நடவடிக்கை வேண்டாம் என தெரிவித்து விட்டு சென்ற நிலையில் கடந்த மாதம் மீண்டும் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் பெறப்பட்டு நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இதையடுத்து, வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு தனது வழக்கறிஞர்களுடன் சென்ற நடிகை விஜயலட்சுமி, சீமான் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக எழுத்துப்பூர்வமான கடிதத்தை அளித்தார்.
இந்த நிலையில், போலீஸின் அழைப்பாணையை ஏற்று சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக சீமான் இன்று ஆஜரானார். அவரது மனைவி, வழக்கறிஞர்கள் உள்பட 5 பேர் மட்டுமே காவல் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். சீமானுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் கூடிய நிலையில், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.








