எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
நாட்டின் 15 வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலுக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு களமிறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை களம் காண்கிறார்.
இந்நிலையில் ராகுல்காந்தி, காங்கிரஸ் மாநிலங்களவை குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தி.மு.க. சார்பில் மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, ஆ.ராசா, இடதுசாரி கட்சிகள் சார்பில் டி.ராஜா மற்றும் சீதாராம் யெச்சூரி, டி.ஆர்.எஸ். தரப்பில் அக்கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவ், அதேபோன்று திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் முன்னிலையில் வேட்புமனுதாக்கல் செய்தார் யஷ்வந்த் சின்ஹா.
இந்த தேர்தலில் வாக்களிக்க உரிமையுடையவர்களாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என மொத்தமாக 4,033 பேர் உள்ளனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவையின் 543 உறுப்பினர்கள், மாநிலங்களவையின் 233 உறுப்பினர்களும் வாக்களிக்க தகுதியுடையோராவார்கள்.
தேர்தலில், எம்.பிக்களின் மொத்த வாக்கு மதிப்பு 5,43,200. எம்எல்ஏக்களின் மொத்த வாக்கு மதிப்பு 5,43,231. மொத்தமாக 10,86,431 ஆகும். மொத்த வாக்கு மதிப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறுபவரே குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். தேசிய ஜனநாயக கூட்டணியின் மொத்த வாக்கு மதிப்பு 5,25,893. அதாவது 48.67 சதவீத வாக்குகளை கைவசம் தேஜகூ தன்வசம் வைத்துள்ளது.
தனிப்பட்ட முறையில் பாஜகவின் வாக்கு மதிப்பு 4,56,582. அதாவது 42.26 சதவீதம். கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி 22,601 வாக்கு மதிப்பையும், (2.09%) கொண்டுள்ளது. மற்றொரு கூட்டணியான அதிமுக 14,940 வாக்கு மதிப்புடன், 1.38 சதவீத வாக்குகளையும் கொண்டுள்ளது.
அதேபோல, ஆம் ஆத்மி 21,802 வாக்கு மதிப்புடன், 2.02 வாக்கு சதவீதத்தை கொண்டுள்ளது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் வாக்கு மதிப்பு 24,796, வாக்கு சதவீதம் 2.30, பிஜூ ஜனதா தளம் வாக்கு மதிப்பு 31,686, வாக்கு சதவீதம் 2.94, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 45,550 வாக்கு மதிப்புடன் , 4.22 சதவீதமாக உள்ளது.
இப்படியான சூழலில் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதை 11.43 சதவீத வாக்குகளை வைத்துள்ள எந்த அணியிலும் சாராத இந்த 4 கட்சிகள்தான் தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.








