பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறியுள்ளார்.
நாமக்கல்லை அடுத்த லத்துவாடியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும்
ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்தை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சா.மு.நாசர், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.84 கோடி மதிப்பீட்டில் தினசரி 2 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் ஆலை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். பால் கொள் முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளது குறித்து பதிலளித்த சா.மு.நாசர், இது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார்.
ஆவின் நிறுவனம் நாள் ஒன்றுக்கு ரூ.85 லட்சம் நஷ்டத்தை சந்தித்து வருவதாகக் கூறிய அமைச்சர், ஐஸ்கிரீம், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பல்வேறு மதிப்பு கூட்டு பொருட்கள்
தயாரித்து அந்த நஷ்டம் ஈடுகட்டப்படுவதாக தெரிவித்தார். கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய மாநிலங்களில் புதியதாக ஆவின் கூட்டுறவு ஒன்றியம் அமைக்கப்படும் என்று குறிப்பிட்ட பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 1000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றார்.
தமிழ்நாடு அமைச்சர்கள் மீது மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஊழல் புகார்களை கூறி வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சா.மு.நாசர், சுய விளம்பரத்திற்காக அவர் அவ்வாறு பேசி வருவதாக குற்றம்சாட்டினார். ஆவின் நிறுவனம் இதுவரை ஹெல்த் மிக்ஸ் பவுடர் தயாரிக்கவே இல்லை எனவும் விளக்கமளித்தார். தமிழ்நாட்டில் எந்த ஒரு காலத்திலும் நோட்டாவை பாஜகவால் மிஞ்ச
முடியாது என்றும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் விமர்சித்தார்.







