“PET வகுப்புகளை கடன் வாங்காதீர்கள்” – துணை முதலமைச்சர் #UdhayanidhiStalin கோரிக்கை

PET வகுப்புகளை Maths, Science ஆசிரியர்கள் கடன் வாங்காதீர்கள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான கலை திருவிழா நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,

“ஏதோ ஒரு கலை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பதற்காக நடத்தாமல், சூழல் பாதுகாப்பு அனைவருடைய பொறுப்பு என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சி நடத்தி உள்ளீர்கள். எத்தனை முறை பாராட்டினாலும் போதாது. தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கலையரசி மற்றும் கலையரசன் விருதுகள் வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவிட்டிருந்தார்.

அவரின் உத்தரவின்படி, நடைபெறம் இந்த சிறப்புக்குரிய விழாவில் பங்கேற்று உங்களுக்கு விருதுகள் வழங்குவதில் நான் மிகவும் பெருமையடைகிறேன். பெரியவர்கள் தான் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்குவர். ஆனால் குழந்தைகள் ஆகிய நீங்கள் தவிர்க்க முடியாத காலத்திற்கு ஏற்ப கலை நிகழ்ச்சி நடத்தி உள்ளீர்கள். காரணம் என்னவென்றால் நாளை இது உங்களது உலகமாக இருக்கப் போகிறது. நீங்கள் எனக்கு அட்வைஸ் கொடுக்கவில்லை, ஆர்டர் போட்டு இருக்கிறீர்கள். அதற்கான பொறுப்பு தற்பொழுது எங்கள் இடத்தில் உள்ளது.

இங்கு வந்திருக்கக்கூடிய கலை அரசர்கள், கலையரசிகள் உங்களை எல்லாம் பார்க்கும் பொழுது ஒரு புதுவித உற்சாகம் ஏற்படுகிறது. தமிழ்நாட்டு மாணவர்களான நீங்கள் எப்பொழுதுமே ஸ்பெஷல்தான். பிற மாநில மாணவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு இடத்தில் ஸ்பெஷல் ஆக இருப்பார்கள்.

ஆனால் தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டும்தான் விளையாட்டு, கல்வி மற்றும் எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் தலைசிறந்தவர்களா உள்ளனர். 46 லட்சம் மாணவர்கள் இந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 13 ஆயிரத்துக்கு மேலான மாணவர்கள் இங்கு வருகை தந்துள்ளீர்கள்.

கடந்த 3 ஆண்டுகளாக ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுதான் முதல் முறையாக ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. அனைவருடைய முகத்தையும் பார்க்கும் பொழுது நாளைய எதிர்காலம் தெரிகிறது. ஒவ்வொருவருடைய முகத்தை பார்க்கும் போதும் எதிர்கால தலைவர்களின் முகத்தை பார்ப்பதுபோல் இருக்கிறது.

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியை எல்லாருக்கும் தெரியும். அவர் எல்லோருக்குமான தலைவர். எழுத்தாளர், பத்திரிக்கையாளர், திரைக்கதை ஆசிரியர், பாடல் ஆசிரியர், அரசியல்வாதி, முதலமைச்சர் என பல துறைகளிலும் சிறந்தவர் தான் மு.கருணாநிதி. அவருக்கு இத்தனை பெயர்கள் இருந்தாலும் ‘கலைஞர்’ என்ற பெயர்தான் அவருக்கு பிடித்தது.

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் வழியில் நாமும் செல்ல வேண்டும் என்பதற்காகவும், ஒவ்வொருவரும் தலை சிறந்தவர்களாக வேண்டும் என்பதற்காகவும்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கலைத் திருவிழாவை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

இல்லம் தேடிக் கல்வி, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் என்ன எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகள் நடைபெற்ற கலை திருவிழாவில் வெற்றி பெற்ற பலர் தொலைக்காட்சிகளில், மேடை நிகழ்ச்சிகளில் பாராட்டு பெறுவதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஏற்பாட்டில் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் பள்ளி மாணவர்கள் அழைத்துவரப்பட்டார்கள். முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ததில் அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி அளவில்லாலது.  PET வகுப்புகளை Maths, Science ஆசிரியர்கள் கடன் வாங்காதீர்கள். PET பீரியடில் மாணவர்களை விளையாட விடுங்கள்.

நன்றாக விளையாடினால் நன்றாக படிக்க முடியும் என்று Science சொல்கிறது. உங்களுடைய Maths, Science வகுப்புகளை கடன் கொடுத்தீர்கள் என்றால் நாங்கள் சாகசம் செய்து காட்டுவோம். இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பரிசீலனை செய்யும்படி நான் கேட்டுக்கொள்கிறேன். மாணவர்கள் சிறகுகளை வெடித்து உயர உயர பறக்க வேண்டும் என முதலமைச்சர் சொன்ன கருத்தை மீண்டும் பதிவு செய்கிறேன்”

இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.