இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா செய்த சதியால் தான் இலங்கை கிரிக்கெட் அணி மோசமான நிலையில் உள்ளது என முன்னாள் கேப்டன் அர்ஜூன ரணதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கை அணி இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பையில் இருந்து 9 லீக் ஆட்டங்களில் 7ல் தோல்வியடைந்து வெளியேறியது. மேலும் 2025 இல் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறவும் முடியவில்லை. உலகக் கோப்பையில் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு, இலங்கையின் விளையாட்டு துறை அமைச்சர் நவம்பர் 6 அன்று இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்துவிட்டு இடைக்கால வாரியத்தை உருவாக்கினார்.
அணியின் நிர்வாக பணிகளை கவனிக்க இலங்கைக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தலைமையில் ஏழு பேர் அடங்கிய இடைக்கால குழு ஒன்றையும் அரசு நியமித்தது. இந்த அறிவிப்பை அந்த நாட்டின் விளையாட்டு துறை முறைப்படி வெளியிட்டது. இந்தச் சூழலில் இலங்கை அணியை இடைநீக்கம் செய்துள்ளது ஐசிசி.
இந்த விவகாரம் அடங்குவதற்குள்ளாகவே தற்போது புதிய பரபரப்பை கிளப்பி இருக்கிறார் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரான ஜெய் ஷா தொடர்பாக அர்ஜுன ரணதுங்க குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
அதில், இலங்கை கிரிக்கெட் வாரியம் ஜெய் ஷாவால் நடத்தப்படுவதாக அர்ஜூன் ரணதுங்க தெரிவித்துள்ளார். ஜெய்ஷாவின் அழுத்தத்தால் தான் இலங்கை கிரிக்கெட் வாரியம் சீரழிந்து வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இலங்கை கிரிக்கெட்டை சீரழித்து விட்டார் எனவும் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
அர்ஜூன் ரணதுங்காவின் இந்த பரபரப்பான குற்றச்சாட்டுகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் சங்கங்களில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆதிக்கம் செலுத்த விரும்புவதாக ரணதுங்க ஏற்கனவே பலமுறை குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.






