கடலூர் வெள்ளி கடற்கரையில் 3 பேரை கடித்த குதிரையை பொதுமக்கள் அடித்து
கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியில் பள்ளிக்குச் சென்று தாயுடன் வீட்டுக்கு திரும்பி
வந்து கொண்டிருந்த 9 வயது சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி தாக்கியது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடலூரில் குதிரை கடித்ததில் மாணவன் உள்பட 3 பேர் காயமடைந்துள்ளனர்.
கடலூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவரும் கடலூர் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த லோகேஷ்வரன் (வயது 15) பள்ளி முடிந்ததும் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரைக்குச் சென்ற போது, கடற்கரையில் சவாரி செல்லும் குதிரை லோகேஷ்வரனை கடித்துள்ளது. இதில் பதறிய சிறுவன் அங்கிருந்து ஓட தொடங்கினான்.
இருப்பினும் அந்த குதிரை விடாமல் துரத்திச் சென்று அவனை கடித்ததுடன், காலாலும் உதைத்தது. மேலும் வெள்ளி கடற்கரையில் கடை வைத்திருந்த தேவனாம் பட்டினத்தைச் சேர்ந்த பத்மாவதி (65) சொக்கலிங்க தெருவை சோ்ந்த தேன்மொழி ஆகியோரையும் குதிரை கடித்தது. இதை பார்த்த பொதுமக்கள் அந்த குதிரையை கல் மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் அந்த குதிரை உயிரிழந்தது.
இதற்கிடையே குதிரை கடித்ததில் காயமடைந்த லோகேஷ்வரன் உள்பட 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி தகவல் அறிந்த தேவனாம் பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு குதிரையின் உரிமையாளரான கடலூர் புதுப்பாளையம் ராமதாஸ் தெருவை சேர்ந்த வினோத் (35) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







