31.4 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் தமிழகம்

காங்கிரஸ் இல்லாத இந்தியா VS காங்கிரசின் 5 வாய்ப்புகள்


மரிய ரீகன் சாமிக்கண்ணு

காங்கிரசின் இன்றைய நிலை:

இந்தியா சுதந்திரம் அடைந்த முதல் பொதுத்தேர்தலான 1952 தொடங்கி 1977 வரை நடந்த அத்தனை பொதுத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி தான் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று 2014 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா கூறினாரே அப்படித்தான் 1977 நாடாளுமன்ற தேர்தல் வரை காங்கிரஸ் கட்சியின் நிலை இருந்தது. இந்தியா என்றால் காங்கிரஸ், காங்கிரஸ் என்றால் இந்தியா. இந்த நிலை தான் சுதந்திர இந்தியாவிற்கு பிறகு கால் நூற்றாண்டு காலம் வரை இந்திய அரசியல். ஆனால், இன்றைக்கு காங்கிரசின் நிலை தலைகீழ். சத்தீஸ்கர், ராஜஸ்தான் என்ற இரண்டு மாநிலங்களைத் தாண்டி காங்கிரஸ் கட்சி தான் ஆட்சி செய்த மாநிலங்களை இழந்து நிற்கிறது. 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக பத்து ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி செய்தாலும், அந்த பத்து ஆண்டுகளில் அந்த கட்சியின் மீது சுமத்தப்பட்ட 2ஜி ஊழல் புகார், தெற்காசிய விளையாட்டு போட்டி ஊழல் என அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் காங்கிரஸ் கட்சியை தேசிய அரசியலில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கூட இழக்கச் செய்தது. 2014-ல் நடந்த 16-வது மக்களை தேர்தலில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் 543 இடங்களில் வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறமுடியாமல் போய்விட்டது. அந்த தேர்தலில் ஒரு மாநில கட்சியாக மட்டுமே இருந்த அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்று தேசிய அரசியலில், நாடாளுமன்ற வரலாற்றில் தனி முத்திரை பதித்தது. வலதுசாரி கட்சியாக பார்க்கப்படும் பாஜகவை தமிழ்நாட்டில் வீழ்த்திய ஜெயலலிதா, 2014 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, பெரியாரின் சித்தாந்தத்திற்கு கிடைத்த வெற்றி, அண்ணாவின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி, புரட்சி தலைவர் எம்.ஜி. ஆரின் புகழுக்கு கிடைத்த வெற்றி என புலகாங்கிதம் அடைந்தார்.  நூற்றாண்டு கண்ட காங்கிரஸ், இந்தியாவை அதிக முறை ஆட்சி செய்த காங்கிரஸ், 1977 வரை தோல்வியையே காணாமல் வெற்றியை மட்டுமே கண்ட காங்கிரஸ் தனது அரசியல் வாழ்வின் துயர்மிகு பக்கமாக அந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்தது. அன்று தொடங்கிய காங்கிரஸ் கட்சியின் சரிவு,  சில மாநிலங்களின் இடைத்தேர்தல்களில் வெற்றிகளை ஈட்டினாலும், 2019 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அரியணையை இழந்து ஏற்றம் இல்லாத வரலாற்றை பதிவு செய்யும் வகையில் தான் இன்று வரை தொடர்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


காங்கிரஸ் இல்லாத பாரதம் :

காங்கிரஸ் முக்த் பாரத் கோஷத்தை அதாவது காங்கிரஸ் இல்லாத இந்தியா கோஷத்தை பாஜகவின் நிறுவன நாள் கூட்டத்தில் மோடி பேசியுள்ளது இந்த இடத்தில் கவனிக்க வேண்டி இருக்கிறது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பிரச்சார இயக்கமாகவே காங்கிரஸ் முக்த் பாரத் கோஷத்தை மோடியும் ராஜ்நாத் சிங்கும் தேசிய அளவில் கட்டமைத்தனர். 8 ஆண்டுகள் கழித்து 2022 ஆம் ஆண்டில் அந்த பிரச்சாரத்தின் நிலையை திரும்பிப் பார்த்தால் ராஜஸ்தான், சத்தீஸ்கர் என 2 மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் ஆட்சி செய்வது காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற பாஜகவின் வியூகத்திற்கு வெற்றி கிடைத்துவிட்டதா என்பதை எண்ணிப்பார்க்க வைத்துள்ளது. அரசியலில் வெற்றி தோல்வி என்பது இயல்பானது தான் என்றாலும் மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்கவும், மாநிலங்களில் அசைக்க முடியாத கட்சியாக காங்கிரஸ் தன்னை எப்படி நிலை நாட்டப்போகிறது என்பதையும் ஆராய வேண்டி இருக்கிறது.


கூட்டணியை கட்டுவதில் சிக்கல்:

தேசிய அளவில் பாஜக அசைக்க முடியாத சக்தியாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டு உள்ளது. 2022ல் நடந்த ஐந்து மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றியை ஈட்டியதன் மூலம் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெறும் என்று அந்த கட்சியின் நிர்வாகிகள் திரும்பத் திரும்ப பேசி வருகின்றன. செல்வாக்கு மிக்க ஒற்றை கட்சியாக பாஜக தன்னை உறுதிபடுத்திக்கொண்டதால், அந்த கட்சிக்கு எதிராக வலுவான கூட்டணியை கட்டமைக்க வேண்டிய தேவையை நோக்கி காங்கிரஸ் நகர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க இருக்கும் கட்சிகளான, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், அனைத்துமே காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து மாநிலங்களில் செல்வாக்கு செலுத்தும் கட்சிகளாகவே இருக்கின்றன. இந்த கட்சிகளை மீண்டும் காங்கிரஸ் தலைமையை ஏற்க வைப்பது என்பது ஒரு சவாலான சாகசம். ஆனாலும், இந்த சாகசத்தை காங்கிரஸ் கட்சி தனது நிலையில் இருந்து பல படி கிழ் இறங்கி வைத்து செய்தே ஆக வேண்டும். மம்தா, ஜெகன் மோகன் ரெட்டியை தவிர்த்து சரத்பவார், உத்தவ் தாக்ரே, சந்திரசேகர் ராவ், ஸ்டாலின் ஆகியோர் காங்கிரஸ் தலைமையை ஏற்க தயாராக இருப்பதால் காங்கிரஸ் கை மீண்டும் ஓங்க வாய்ப்பு உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ அரசியல் நாளிதழான சாம்னா, காங்கிரஸ் இல்லாத ஓரணியை உருவாக்க முடியாது என வெளிப்படையாகவே அறிவித்தது. சந்திரசேகர் ராவ் – உத்தவ் தாக்கரே சந்திப்புக்கு பிறகு வெளியான இந்த செய்தியை அரசியல் முக்கியத்துவம் கருதி தான் கவனிக்க வேண்டும். அதே போல், 4 நாள் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் ஸ்டாலினும் காங்கிரஸ் தலைமையில் மட்டுமே தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை கட்ட முடியும் என்று கூறியதை நினைவில் கொள்ள வேண்டும். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞர் மாநாட்டில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையை சரத்பவார் ஏற்க வேண்டும் என தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை மறுத்த சரத்பவார், தேசிய தலைமையை ஏற்கும் பலம் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது எனக் கூறினார்.
உத்தவ் தாக்கரே, ஸ்டாலின், சரத் பவார் ஆகிய முக்கிய தலைவர்கள்  காங்கிரஸ் தலைமையை ஏற்க தயாராக இருக்கின்றனர். காங்கிரசில் இருந்து பிரிந்து வந்ததும். காங்கிரஸ் கட்சியின் பெரியண்ணன் மனநிலையாலுமே மம்தா, ஜெகன் மோகன், சந்திரசேகர் ராவ், ஆகியோர் காங்கிரஸ் தலைமையை ஏற்க தயங்குவதற்கு காரணம். இப்படி ஒரு அதிருப்தி காங்கிரஸ் மீது இருப்பதை உணர்ந்து உடனடியாக காங்கிரஸ் அதை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.


3-வது அணிக்கு வாய்ப்பு இல்லை:

மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருந்தாலும் கூட காங்கிரஸ் இல்லாத கூட்டணி என்பது சாத்தியம் இல்லை. மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருந்தாலும் கூட காங்கிரஸ் இல்லாத கூட்டணி என்பது சாத்தியம் இல்லை. மாநில வளர்ச்சிக்காக மட்டுமே மத்திய அரசுடன் இணக்கம் மற்றபடி பாஜக எதிர்ப்பில் திமுக உறுதியாக இருக்கிறது. இதே போலவே, மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணியில் சிவசேனா ஆட்சி செய்வதால் கூட்டணி அமைப்பதில் அந்த கட்சிக்கும் தயக்கம் இருக்காது. நடந்து முடிந்த உத்தரப்பிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் எதிரெதிராக போட்டியிட்டாலும் கூட, சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டி வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. இதனால், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியில் பாஜகவுக்கு எதிராக சமாஜ்வாடி கட்சி காங்கிரஸ் கூட்டணியில் சேர தயங்காது என்று அனுமானிக்க முடிகிறது. ஐந்து மாநில தேர்தல் முடிவுக்கு பிறகு காங்கிரஸ் தலைமையை ஏற்பதில் மம்தா பானர்ஜி இடமும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கவனிக்கலாம். அரவிந்த் கெஜ்ரிவால் மட்டும் காங்கிரஸ் தலைமையை ஏற்க மறுகிறார். இதனால், கெஜ்ரிவால் இல்லாமல், மம்தாவை உள்ளடக்கி, ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, சரத்பவார், அகிலேஷ் யாதவ், இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைத்த ஒரு கூட்டணியை கட்டினால், அது காங்கிரஸ் கட்சிக்கு பலமாகவும் பாஜகவுக்கு பலவீனமாகவும் மாறுவிடும். இந்த ஒருங்கிணைப்பை காங்கிரஸ் கையில் எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.


ஜி 23 தலைவர்களின் அதிருப்தி:

காங்கிரஸ் கட்சி தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது அந்த கட்சிக்குள்ளேயே அதிருப்தி தலைவர்களை உருவாக்கியுள்ளது. குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல், சசிதரூர், மணிஷ்திவாரி, மணிஷங்கர் அய்யர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அதிருப்தி தலைவர்களின் பட்டியலில் இருப்பது காங்கிரஸ் தலைமைக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.  இருப்பினும், இவர்கள் கங்கிரஸ் கட்சியை வலுவாக கட்டமைப்பதற்கு, பாஜக எதிர்ப்பு மனநிலை கொண்ட கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கும் முக்கியத்துவம் அளிப்பதால் இந்த அதிருப்தி காங்கிரசை பலப்படுத்தும் என்றே பார்க்கப்படுகிறது. மேலும், இவர்கள் அதிருப்தியில் இருந்தாலும் கூட, சோனியா காந்தி அழைப்பின் பேரில் பேச்சுவார்த்தையும் நடத்தி வருவதால் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் புது வியூகத்தோடு பயணிப்பதை புரிந்து கொள்ள முடியும்.

இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸ்:

ஐந்து மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவினாலும் கூட அந்த கட்சியின் வாக்கு வங்கி பெரிதாக சரியவில்லை. உத்தரப்பிரதேசத்தில் 2017ல் நடந்த சட்டமன்ற தேர்தலோடு ஒப்பிடும் போது 2022 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பட்டியல் இன மக்களின் வாக்குகளை கூடுதலாகவே பெற்றுள்ளது. உத்தராகண்டில் பாஜக வெற்றியை பெற்றாலும் கூட 15 சதவிகிதம் வாக்குகள் அந்த கட்சிக்கு சரிந்துள்ளது.  அதே போல், குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் என இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரசின் செல்வாக்கு சரியவில்லை. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி செய்வது, குஜராத், மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருப்பதும் அந்த கட்சியின் பலத்தை காட்டுகிறது. இது, இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி சிதையவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. இதனால், சரியான வியூகமும் கூட்டணி பலத்தை கட்டுவதும் காங்கிரஸ் கட்சியை மத்தியில் அரியணை ஏற்றும் என்றே பார்க்கப்படுகிறது.


நம்பிக்கை அளிக்கும் குஜராத், கர்நாடகா ?:

இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள குஜராத் சட்டமன்ற தேர்தல் 2023ல் நடைபெற உள்ள கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டி உள்ளது. கர்நாடக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆளும் பாஜகவை காட்டிலும் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதனால், 2023 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தெளிவான வியூகத்தை அமைத்தால் வெற்றி எளிதில் கிடைக்கும் என்றே பார்க்கப்படுகிறது. அதே போல, குஜராத், கர்நாடகா சட்டமன்ற தேர்தல்களில் தனது வாக்கு வங்கியை சரியால் காங்கிரஸ் கட்சி பார்த்துக்கொண்டாலும் காங்கிரஸ் கட்சியின் அரியணை கனவு நினைவாகும் என்றே கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் கூட 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு குஜராத், கர்நாடகா சட்டமன்ற தேர்தலும் முக்கிய கவனிப்பு களமாக மாறியுள்ளது. இந்த இரு மாநில தேர்தலுக்காக பாஜக தற்போதே பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டது. ஐந்து மாநில தேர்தல் முடிந்த உடனேயே  குஜராத்தில் திட்டங்களைத் தொடங்கிவைத்ததையும் தனித்து கவனிக்க வேண்டியுள்ளது. காங்கிரஸ் கட்சி தனது உட்கட்சி பிரச்சனைகளை விரைந்து முடித்துக்கொண்டு களத்திற்கு சென்றால் மட்டுமே வெற்றி என்பது சாத்தியம். இல்லையென்றால், பஞ்சாப் மாநிலத்தில் நேர்ந்த சோதனை தான் காங்கிரஸ் கட்சிக்கு குஜராத், கர்நாடகா சட்டமன்றத்தில் ஏற்படும்.
வாங்கு வங்கி, நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் மக்கள் பிரதிநிதித்துவ அடிப்படையில் பாஜக செல்வாக்கு மிக்க கட்சியாக இருக்கிறது. இருப்பினும் கூட 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருப்பதால் தேசிய அளவிலான நகர்வுகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading