முறைகேடாக நிதியை பரிமாற்றம் தொடர்பான விவகாரத்தில் காபி டே குழுமத்துக்கு பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அபராதம் விதித்துள்ளது.
காபி டே குழுமத்தின் தலைவராக இருந்த விஜி சித்தார்த்தா கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் தற்கொலை செய்து கொண்டார். காபி டே குழுமத்துக்கு அதிக கடன் சுமை இருந்த காரணமாக வி.ஜி. சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்பிறகு, பல்வேறு தரப்பிலிருந்து காபி டே குழுமத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக காபி டே குழுமத்தின் இயக்குநர் குழு, ஓய்வு பெற்ற டிஐஜி அசோக் குமார் மல்ஹோத்ராவை நிறுவனத்தின் கணக்குகளை ஆய்வு செய்ய நியமித்தது. பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியும் முறைகேடாக நிதி பறிமாற்றம் ஏதும் நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியது. இந்த விசராணையில் முறைகேடாக நிதி பரிமாற்றம் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
காபி டே குழுமத்தில் 7 துணை நிறுவனங்கள் உள்ளன. காபி டே குளோபல், டேங்கிளின் ரீடெய்ல் ரியாலிட்டி டெவலப்மெண்ட்ஸ், டேங்கிளின் டெவலப்மெண்ட்ஸ், கிரி வித்யூத் லிமிடெட், காபி டே ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ், காபி டே டிரேடிங், காபி டே இகான் என 7 துணை நிறுவனங்கள் காபிடே குழுமத்துக்கு சொந்தமாக உள்ளன.
இந்த 7 துணை நிறுவனங்களிலிருந்து எம்ஏசிஇஎல் நிறுவனத்துக்கு நிதி பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிதி, காபி டே நிறுவனத்தின் தலைவராக இருந்த வி.ஜி.சித்தார்த்தாவின் சொந்த கணக்குக்கும், அவரது குடும்பத்தினர் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் முறைகேடாக நிதி பறிமாற்றம் நடைபெற்றுள்ளதாக செபி கண்டறிந்துள்ளது. இதன் காரணமாக 26 கோடி ரூபாய் அபராதத்தை காபி டே குழுமத்துக்கு செபி விதித்துள்ளது. மேலும் 45 நாட்களில் செலுத்த வேண்டும் என செபி குறிப்பிட்டுள்ளது.
இந்த எம்ஏசிஇஎல் நிறுவனம் முழுவதுமாக விஜி சித்தார்த்தாவின் குடும்பத்தினருக்கு சொந்தமானது. அவரின் குடும்பத்தினர் 91.75 சதவீத பங்குகளை இந்த நிறுவனத்தில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட காபி டே குழும நிறுவனங்களிலிருந்து ரூ.3,535 கோடி ரூபாய் முறைகேடாக எம்ஏசிஇஎல் நிறுவனத்துக்கு நிதி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செபி குறிப்பிட்டுள்ளது.