பள்ளி நிகழ்ச்சிகளில் குத்து பாடல்கள் ஒலிப்பது முறையா என கேள்வி எழுப்பிய
சென்னை உயர் நீதிமன்றம், காந்தியடிகள், காமராஜர், அப்துல் கலாம் ஆகியோரின்
திட்டங்கள் குறித்த கட்டுரைகள் எழுத வேண்டுமென்ற நிபந்தனையுடன் மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த
நிகழ்ச்சியில் பாடல்கள் ஒலிப்பது தொடர்பாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் காயமடைந்த சில மாணவர்கள்,
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடுதியில் அத்துமீறி நுழைந்து வார்டனையும்,
ஆசிரியர்களையும், மாணவர்களையும் தாக்கியுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பள்ளி முதல்வர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏற்காடு காவல் நிலையத்தில்
பதிவான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சில மாணவர்கள் முன்ஜாமீன் கோரி சென்னை
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிபதி RMT.டீக்காராமன் விசாரித்தார்.
பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில், அன்பு, ஒழுக்கம் மூலம் நற்பண்புகளை
வளர்க்கும் இடமாகவும், கல்வி அறிவைப் பெற்றுத்தரும் தளமாகவும் உள்ள பள்ளியில்
மாணவர்கள் மத்தியில் வேற்றுமை வேற்றுமை உணர்வு தோன்றக் கூடாது என்பதற்காகத்
தான் சீருடை அணிவதை முதல்வராக இருந்த காமராஜர் அறிமுகப்படுத்தியதாக
குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிகளில் இதுபோன்ற குத்துப் பாட்டு ஒலிப்பது முறையா எனக் கேள்வி
எழுப்பியதுடன், பள்ளி நிர்வாகங்கள் சிந்திக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மனுதாரர்கள் தற்போது கல்லூரிகளில் படித்து வருவதை சுட்டிக்காட்டிய நீதிபதி
டீக்காராமன், அனைத்து மாணவர்களும் பள்ளி தலைமை ஆசிரியர் முன் ஆஜராகி, ஆயிரம் ரூபாய்க்கான பிணை செலுத்த வேண்டும் என்றும், ஒரு வாரத்திற்கு பள்ளி
வகுப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் நிபந்தனைகளை விதித்து,
மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி நூலகத்தில் இருந்து மகாத்மா காந்தியின் அஹிம்சை கொள்கைகளைப் பற்றியும், காமராஜர் துவங்கிய கல்வித் திட்டங்கள் பற்றியும், அப்துல் கலாமின் கனவு மற்றும் திட்டம்
பற்றியும் கட்டுரைகள் எழுத வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளார்.