நகராட்சி நிர்வாகத் துறையின் திட்டப் பணிகள் முழுவதையும் நாடாளுமன்ற
தேர்தலுக்குள் முடிக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை ஹோட்டல் லீலா பேலஸில் திடக்கழிவு மேலாண்மை செயல் திட்ட பணிமனைக் கூட்டத்தினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். மேலும், அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி பொதுமக்கள் இணைய வழியாக தங்களது வரியினை செலுத்தவும், புகார்களைத் தெரிவிக்கவும் TN Urban இ-சேவை எனும் கைபேசி செயலியையும், எழில்மிகு நகரம் எனும் மாத இதழினையும் அமைச்சர் வெளியிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு மேடையில் பேசுகையில், ஒரு நகரத்தின் தூய்மையைப் பேணுவதில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் திரவக்கழிவு மேலாண்மை முக்கிய பங்காற்றுகிறது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளையும் இந்திய அளவில் குப்பை இல்லாத நகரமாகவும், 100% அறிவியல் பூர்வமான திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளும் நகரங்களாகவும் மாற்ற அரசு தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. “குப்பையில்லா நகரம்” என்ற குறிக்கோளை அடைய குப்பையைப் பிரித்து வாங்குதல், வீட்டிலேயே சென்று குப்பையை சேகரம் செய்தல், குப்பையை சேகரம் செய்து முறைப்படி அவற்றை செயலாக்க மையத்திற்கு அனுப்புதல், அதனை சிறந்த
முறையில் செயலாக்கம் செய்தல் போன்றவற்றி மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம் ஆகும்.
தமிழகத்தின் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சுமார் 15,000 டன் குப்பை
நாளொன்றுக்கு சேகரம் ஆகிறது. இதில் 55% மக்கும் குப்பை. மீதமுள்ளது 45%
மக்கா குப்பை ஆகும். நகர்ப்புறத்தில் உள்ள திடக்கழிவில் 40-60% மக்கும் குப்பையும், 20-30% மறு சுழற்சி செய்யக் கூடிய வகையிலும், 10-20% மறு சுழற்சி செய்ய இயலாத மக்கா
குப்பையும் உள்ளது. கட்டிடக்கழிவுகள் ஒரு நகரத்தில் சேகரமாகும் குப்பையில்
சுமார் 5-15% இருக்கிறது. ஒரு நகரத்தில் சேகரிக்கும் குப்பையின் தன்மை மற்றும் அளவு அங்கு செயலாக்கம் செய்ய ஏற்படுத்தப்போகும் உட்கட்டமைப்பை முடிவு
செய்கிறது. இதற்கென ஒவ்வொரு நகரமும் ஒரு விரிவான திடக்கழிவு
மேலாண்மைத் திட்டத்தை தயாரிக்க வேண்டியது அவசியமாகும்.
அதிகாரிகளாகிய நீங்கள் நிரந்தரமானவர்கள், நாங்கள் 5 ஆண்டுகளுக்கு பின்
மாறக்கூடியவர்கள். அதனால் எந்த சூழலிலும், உங்களை எப்பொழுதும் காட்டிக்கொடுக்க மாட்டேன். திடக்கழிவு மேலாண்மையை சீர் செய்வது குறித்து முதலமைச்சர் தெரிவித்துள்ளார். நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதேபோல, உடனடியாக செய்ய வேண்டிய பணிகளை செய்தால் அரசுக்கும் முதலமைச்சருக்கும் மக்களிடம் உடனடியாக நன்மதிப்பு வரும். மாவட்டங்களில் வருவாய்க்கு மீறி செலவு இருக்குமானால் சரியாக இருக்காது. அதனால் செலவினத்தை குறைத்து, வருவாயை சரிசெய்து கொள்ள வேண்டும். மேலும், வரி வருவாயை கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பது அதிகாரிகளின் தலையாய கடமையாக உள்ளது.
வரும் 6ஆம் தேதி நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார். அன்றைய கூட்டத்தில் நகராட்சித் துறையில் தேவையானவை என்னென்ன என்பது குறித்து விரிவாக பேசப்பட உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற முதலமைச்சர் கூறியுள்ளார். அடுத்த சட்டமன்ற தேர்தல் வருவதற்குள் நகராட்சி துறையில் எந்த திட்டமும் தேங்காமல் இருக்கவும், தேவையானவற்றை செயல்படுத்தவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். குடிநீர், கழிவுநீர், மின் மயானம் உள்பட பல தேவைகள் பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகள் தொடங்கி அனைத்துப் பகுதிகளிலும் சென்றடைய கூறியுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி மூலமாகவும், அது இல்லாமல் ஒப்பந்தம் மூலமாகவும் அதிகாரிகள்
இல்லாத இடத்தில் அதிகாரிகளை நியமிக்க வேலைகள் செய்து வருகிறோம். உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் முதலமைச்சர். துறையின் வளர்ச்சிக்கு என்ன மாதிரியான முயற்சிகள் தேவை என்பதை அவர் நன்கு அறிவார். அதிகாரிகள் தங்களுக்கான பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். இதேபோல மாதம் ஒரு கூட்டம் நடத்தப்பட்டு, திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என்றார்.
-ம.பவித்ரா