செய்திகள்

ஜோதிபாசு – கிழக்கே உதித்த சேகுவேரா

நாட்டிலேயே 23 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்த முதல் தலைவர் என கொண்டாடப்படும் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவின் பிறந்தநாள் இன்று…….

இன்று “தீதி”ங்ற குரல் எதிரொலித்து கொண்டிருக்கும் மேற்குவங்க மாநிலத்தில், 20 வருடங்களுக்கு முன்பு வரை “தீதா” என்று தான் ஒலித்தது.. அதை மறுத்து பேசுவதற்கு அப்போது ஒருவரும் கிடையாது..

சரியாக சொல்ல வேண்டும் என்றால், 23 ஆண்டுகள் ஒரு சிங்கம் போல் தனது மாநிலத்தை வழிநடத்தியவர் சிவப்பு துண்டும் கண்ணாடியும் அணிந்த அந்த எளிய மனிதர்,,,

அவரது பெயர் ஜோதிபாசு….

ஒரு கட்டுப்பாடான மருத்துவரின் மகன் கம்யூனிசத் தலைவரானதற்கு பின்னால் இருந்த முக்கிய காரணம் என்ன தெரியுமா? ஏகாதிபத்தியம் என்ற ஒரு வார்த்தை…

ஏகாதிபத்தியத்தின் முழு உருவமாக இருந்தவர்கள் ஆங்கிலேயர்கள்…. இதனை எதிர்த்து பலரும் போராட்டம் நடத்திக்கொண்டு இருந்தபோது, சுதந்திர போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்த 1914 ஜூலை 8-ம் தேதி, கொல்கத்தாவை சேர்ந்த மருத்துவருக்கு மகனாக பிறந்தார் ஜோதிபாசு

கொல்கத்தாவில் பள்ளிக்கல்வியை முடித்த பின்பு, லண்டனில் பாரிஸ்டர் கல்வி கற்க புறப்பட்டார். ஆனால் அங்கு படித்ததைவிட போராடுவதே இவருக்கு பிடித்த ஒன்றாக இருந்தது.

அங்கிருந்த இந்தியர்களுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட ஆரம்பிக்க, அந்த தருணத்தில் தான் கம்யூனிச தலைவர்களுடன் ஜோதிபாசுவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

அந்த பழக்கம் கம்யூனிசம் என்றால் என்ன என்ற கேள்வியை உண்டாக்கியது. அதை நோக்கி ஓட ஆரம்பித்தார்… தனது கடைசி காலம் வரை அதை மட்டுமே நோக்கி ஓடினார்…

சிவப்பு துண்டை தூக்கி தோளில் போட்டு அழகு பார்த்தவர், அதே சிவப்பு துண்டு அவரை ஒரு கட்டத்தில் அரியணையில் அமர வைத்தது.

1977 சட்டமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, மேற்குவங்க முதலமைச்சராக பதவியேற்றார் ஜோதிபாசு. 23 ஆண்டுகள் தொடர்ந்து முதலமைச்சர் பதவிய அலங்கரித்தார். நாட்டிலேயே இத்தனை ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தது ஜோதிபாசு மட்டும் தான்…

1946 சட்டமன்றத் தேர்தலில் தொடங்கிய அவரது தேர்தல் வெற்றி, 2001ம் ஆண்டுவரை நீடித்தது. இதில் 1972-ல் மட்டும் தோல்வியை சந்திக்க நேர்ந்தது…

தனது ஆட்சிக்காலத்தில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினவர், தொழில்வளர்ச்சி மேம்படவும், மாநில வளர்ச்சிக்காகவும், பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களை மேற்குவங்கத்திற்கு கொண்டு வந்தார்.

இதன் தொடர்ச்சியாக, 1996ல் பிரதமராகும் வாய்ப்பு இவரை தேடி வந்தது. ஆனால், கூட்டணி ஆட்சியில் தலைமைத்துவத்தை ஏற்க முடியாது என கூறி, கட்சிக்காக அந்த வாய்ப்பை ஏற்க மறுத்து, அதனை விட்டுக்கொடுத்தார் ஜோதிபாசு… ஒருவேலை அன்று அவர் பிரதமராகியிருந்தால்… நாட்டின் நிலைமை இன்று வேறு மாதிரி இருந்திருக்கலாம்….

“மனிதகுலத்தின் விடுதலைக்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன் என்று உறுதியாக சொல்ல முடியும்” என பகிரங்கமாக கூறிய ஜோதிபாசு, 2010ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி இந்த உலகை விட்டு மறைந்தார்…

தனக்கென்று எந்த சொத்தும் சேர்த்துக்கொள்ளாமல், மக்கள் தொண்டே மகேசனுக்கு செய்யும் சேவை என வாழ்ந்த ஜோதிபாசு, மரணத்திற்கு பின்னும், உலகிற்கு தான் பயன்பட வேண்டும் என்று உடல்தானம் செய்த ரியல் காம்ரேட்….

கட்டுரையாளர்: வரலாறு சுரேஷ்

Advertisement:
SHARE

Related posts

‘அரசியல் எங்கள் தொழில் அல்ல கடமை’ கமல்ஹாசன் பேச்சு

Jeba Arul Robinson

’அதுக்கு சரிபட்டு வரமாட்டேன்’ -கேப்டன் பதவியை அன்பாக மறுத்த ரஷித் கான்!

Halley karthi

காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்த சிறப்பம்சங்களை பார்க்கலாம்!

Gayathri Venkatesan