30 வயதுக்கு உட்பட்ட பெரும்பாலானோருக்கு இந்த ‘டாக் மீம்ஸ்’ பற்றி தெரியும் என்றாலும் அது பற்றி தெரியாதவர்களுக்கும். இதைப் பார்த்து ஏன் இளசுகள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும் விளக்கம் சொல்லவே இந்த ஸ்மால் கட்டுரை.
இந்த டாக் மீம்ஸில் cheems, perro, walter, dogge, karuppi என 5 வகையான நாய்கள் முக்கியமான கதாப்பாத்திரங்களாக இருக்கின்றன. இந்த 5 நாய்களும் அவைகளுக்கே உரிய இயல்புடன் என்னென்ன ரகளை பண்ணுகிறது என்பதே இந்த மீம்களின் சாரம். ஒவ்வொரு நாயின் குணாம்சம் என்ன? அது ஏன் இன்றைய இளைஞர்களை பெரிதும் கவர்ந்து இழுக்கிறது என்பதைத் தனித்தனியாகப் பார்க்கலாம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
- சீம்ஸ் (cheems)

சீம்ஸ் ஆக வலம் வரும் நாய்க்கு cheese burger –ஐ நக்கி சாப்பிடுவது மிகவும் பிடித்தமான செயல். அதே நேரம் எந்த வார்த்தையையும் சீம்ஸ்-க்கு சரியாக உச்சரிக்கத் தெரியாது. எல்லா வார்த்தைகளிலும் ‘m’ என்கிற எழுத்தை சேர்த்து தப்பு தப்பாக கூறுவது தான் cheems-ன் தனிச்சிறப்பு. அதற்கு மிகவும் பிடித்த cheeseburger-ஐ கூட cheemsburgar என்றுதான் சொல்லும். இதனால் தான் இந்த நாய்க்கு cheems என்று பெயர் வந்தது. மற்றபடி cheems பழகுவதற்கு இனிமையான, வெள்ளந்தியான மற்றும் மிகவும் வேடிக்கையான நாய். பொய் சொல்லி மாட்டிக்கொள்ளுதல், வீட்டில் boost –ஐ திருடித் தின்று அடிவாங்குதல் உள்ளிட்டவை இதன் அன்றாட செயல்பாடுகள். இதன் அப்பாவித்தனத்தை பார்ப்பதற்கென்று “cheems army” என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கண்ணில் நீர்வர சீம்ஸ் அழுதால் இளைஞர்கள் உள்ளம் துடிதுடித்துப் போகும்.
- பெர்ரோ (perro)

சீம்ஸ் மேல் அனைவருக்கும் ஒரு பரிதாபம் கலந்த அன்பு இருக்கும் என்றால் பெர்ரோ மேல் இளைஞர்களுக்கு சூப்பர் ஸ்டாருக்கு உண்டான மவுசு இருக்கும். Labrador retriever இனத்தைச் சேர்ந்த இந்த நாயின் பூர்வீகம் மெக்சிகோ. வெறும் அரை மீட்டர் உயரமே இருந்து கொண்டு “drug dealer” ஆக வலம் வரும் இந்த நாயின் முக்கிய வேலை கஞ்சா சப்ளை செய்தல் மற்றும் பிரச்னைகளைத் தூண்டிவிட்டு கமுக்கமாக ஒளிந்து கொள்ளுதல். 24 மணி நேரமும் கஞ்சாவிலேயே இருந்து கொண்டு இது செய்யும் அலும்பல்கள் மிகவும் குறும்புத்தனமாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. ஸ்கூலுக்கு போகும் வயதில் இருந்து கொண்டு ஏரியா ரவுடிகளுடன் கஞ்சா பொட்டலம் மாற்றுதல், ஏரியா விட்டு ஏரியா போய் பிரச்சனை பண்ணிவிட்டு ஓடி வந்து ஒளிந்து கொள்ளுதல், ஸ்கூல் பாத்ரூமில் எதிர் கேங்குடன் சண்டை போட்டு டீச்சரிடம் மாட்டிக்கொள்ளுதல், மாட்டிக்கொண்டு அடி வாங்கும்போதும் கெத்தாக பஞ்ச் டயலாக் பேசுதல் உள்ளிட்டவை perro–வின் ட்ரேட் மார்க்.
- டாகி (dogge)

இந்த doggie ஒரு பணக்கார வீட்டுப்பிள்ளை. பணக்கார வீட்டுப்பிள்ளைக்கே உரித்த தோற்றத்துடன், கேங்க் லீடராக வலம் வருகிறது. நண்பர்களுடன் வெளியே செல்லும் போது அவர்களுக்கு செலவு செய்வது, வீட்டில் அப்பா அம்மா ஊருக்கு போய்விட்டால் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து மொத்தமாக வீடியோ கேம் விளையாடுவதுதான் இதன் பொழுதுபோக்கு. அவ்வப்போது racist ஆக பேசும், ஆணாதிக்கத்தோடு செயல்படும் மற்றும் தன்னை அறியாமலே ஆதிக்க சாதி மனநிலையை வெளிப்படுத்தும். மற்றபடி நண்பர்கள் மேல் பாசமாக இருக்கும். ஒவ்வொரு முறையும் நண்பர்களால் தன் அப்பாவிடம் மாட்டி அடி உதை வாங்கினாலும் நண்பர்களை மட்டும் விட்டுக் கொடுப்பதில்லை.
4.வால்டர் (Walter)

இந்த கேங்கிலேயே பார்ப்பதற்கு முரட்டு பீசு போலத் தெரியும் இவர் உண்மையில் ஒரு முட்டாப்பீசு என்றுதான் கூற வேண்டும். பிரச்னை பண்ணி மற்றவர்கள் கண்டுபிடிக்கும் முன்னரே உச்சா போய் தானாக மாட்டிக்கொள்வது இதன் தனிச்சிறப்பு. தீயணைப்பு வண்டிகள், பெரிய லாரிகள் walter-க்கு மிகவும் பிடித்தமானவை. எவ்வளவு முக்கியமான வேலை செய்து கொண்டிருந்தாலும் இவற்றை கண்டால் பின்னாடியே ஓடிவிடும். இடம் பொருள் ஏவல் தெரியாமல் சம்மந்தம் இல்லாமல் பேசுவது, என்ன விளைவுகள் ஏற்படும் என்று தெரியாமல் மற்றவர்கள் சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு செய்வது, ஸ்கூல் மிஸ்ஸை திட்டி மற்றவர்கள் ஸ்டேடஸ் போட்டால் அதை screen shot எடுத்து மிஸ்ஸுக்கே அனுப்பி போட்டுக்கு கொடுப்பது உள்ளிட்டவை வால்டரின் பார்ட் டைம் ஜாப்கள்.
- கருப்பி (Karuppi)

மற்ற நாய்கள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. கருப்பி மட்டும் இயக்குநர் ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்திலிருந்து எடுக்கப்பட்டது. கருப்பி ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த தமிழ்நாட்டு நாய். மிகவும் அப்பாவி, யாருக்கும் தீங்கிளைக்காத இயல்பு கொண்டது. Cheems-ம் walter-ம் கூட கருப்பியை எளிதாக ஏமாற்றிவிடும். மிகவும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் கருப்பி, சில சமயங்களில் dogge-யின் சாதி வெறிப் பேச்சுக்கு எதிராக குரல் கொடுக்கவும் தவறுவதில்லை.

இந்த டாக் மீம் கலாச்சாரம் 2013 ஆம் ஆண்டிலேயே வெளிநாடுகளில் புழக்கத்திற்கு வந்துவிட்டது. ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்குப் பிறகே தமிழகத்தில் பிரபலமடைந்து வருகிறது. தமிழில் சீம்ஸ்டா , சீம்ஸ் ராஜா, டாக்கி லிவ்ஸ்-ன் தமிழ்நாடு ஆகிய பக்கங்கள் இந்த வகையான டாக் மீம்ஸுக்கு பிரபலமானவை. இந்தப் பக்கங்கள் அனைத்துமே வெறும் காமெடி மீம்களாக மட்டுமல்லாமல் சமூக விஷயங்களையும் எந்த கருத்து திணிப்புமின்றி கேலி செய்வதால் பலருக்கும் விருப்பமானதாக இந்த ‘டாக் மீம்ஸ்’இருக்கிறது.
இந்த ‘டாக் மீம்ஸ்’ குறித்து விளக்கி எழுதியவர் கட்டுரையாளர் சில்வியா சுவாமிநாதன்.
இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.