முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

இனியனின் சமூகம் சார்ந்த 7 பதில்கள்!


மா.நிருபன் சக்கரவர்த்தி

கட்டுரையாளர்

ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்பிற்கு தனிமனிதர்கள் துவங்கி சமூகத்தின் அனைவருக்குமான பங்காக இருக்கிற போது அச்சமூகத்தின் ஓர் அங்கமாக அடியெடுத்து வைக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் ஒட்டுமொத்த சமூகமும்தானே பொறுப்பேற்க வேண்டும் என்ற கோட்பாடுகளை முன்னிருத்தி குழந்தைகளுக்கான கலை இலக்கிய நிகழ்வு, குழந்தைகள் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது, சமூகத்தை குழந்தைகள் அச்சமின்றி எவ்வாறு அணுகுவது என்றும் குழந்தைகளின் மன ரீதியான பிரச்சனைகள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு களத்திற்கே சென்று தீர்ப்பது என்று முழு நேர பணியாக செய்து கொண்டிருக்கும் இனியன் இந்த வார அடுத்தகட்ட ஆளுமைகளும் நியூஸ்7 தமிழின் 7கேள்விகள் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர். மேலும் அவர் முன்னெடுக்கும் பணிகள் ஏராளம் அதில் பண்டையகால அழிந்து போன 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய விளையாட்டுகளையும் ஆவணப்படுத்தியுள்ளார். மலைவாழ், பழங்குடி மக்களின் வாழ்விட பள்ளிகள் மற்றும் அரசு பள்ளி குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் முக்கிய பாலமாகவும் விளங்குகிறார்.

நேர்காணல் மா.நிருபன் சக்கரவர்த்தி

1.குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை தடுப்பது எவ்வாறு?

ஒவ்வொரு வயதிற்கு ஏற்றப்படியான வளர்ச்சிக்கு தக்கப்படியான பாலியல் கல்வி மற்றும் பாலியல் சமத்துவக் கல்வியையும் கல்வி நிலையங்கள் முதல் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் புரிதல்களை ஏற்படுத்துதல் மூலமே பாலியல் வன்முறைகளை தடுக்க முடியும்

2.தொழில்நுட்ப வளர்ச்சி குழந்தைகளை எவ்வகையில் பாதிக்கும்?

அனைத்து தொழில்நுட்ப வளர்ச்சிகளும் குழந்தைகளை பாதிக்கும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அப்படி சொல்லவும் கூடாது. பாதிப்பு என்பது அவற்றிற்கு மட்டுமே அடிமையாகி அந்தப் போதையிலேயே வாழ்வை ஒப்புக்கொடுக்கிறப் போது குழந்தைகளின் வளர்ச்சியில் இருந்து ஒட்டுமொத்த வாழ்வுமே பாதிப்பாக மாறும். நெறிப்படுத்தப்பட்ட பயன்பாட்டை உடைய தொழில்நுட்ப வளர்ச்சியே பாதிப்பற்ற வளர்ச்சியாக இருக்கும்.

3.நீங்கள் பல பள்ளிகளுக்கு சென்றிருப்பீர்கள், அவர்கள் காந்தி, நேரு மற்றும் அம்பேத்கர், பெரியார் பற்றிய அவர்களின் பார்வை எவ்வாறு உள்ளது?

பெரும்பாலும் வரலாறு மற்றும் தலைவர்கள் பற்றியத் தகவல்கள் பாடப் புத்தகங்களில் என்னவாக இருக்கிறதோ அவை மட்டும் அவர்களிடம் இருக்கிறது. ஒருசில ஆசிரியர்களின் முன்னெடுப்பால் சில குழந்தைகளுக்கு தலைவர்கள் பற்றியப் புரிதல்களும் பார்வைகளும் மாற்றம் கண்டுள்ளன.

4.குழந்தைகளிடம் புத்தக வாசிப்பை முன்னெடுப்பது எவ்வாறு?

குழந்தைகள் அருகே இருக்கும்போது நாமும் இணைந்து புத்தகங்கள் வாசிப்பது. அவர்களுக்கு தேவையான புத்தகங்களை எவ்வித மறுப்பும் இன்றி தேர்ந்தெடுக்கும் உரிமையை அவர்களுக்கு வழங்குவது.

புத்தகங்கள் குறித்து உரையாடுவது. வகுப்பறைகள் தோறும் மினி நூலகமும் பள்ளிகள் தோறும் பெரு நூலகமும் உருவாக்குதல். அவர்களது புத்தகம் பற்றிய அனுபவங்களை கொண்டாட்டமாக அங்கீகாரம் செய்வது போன்றவைகளால் முன்னெடுப்புகள் செய்யலாம்.

5.தாய் அல்லது தந்தை இல்லாமல் வளரும் குழந்தைகள் மனநிலை எவ்வாறு இருக்கும்? அந்தநடைமுறை சிக்கலை விலக்குவது எவ்வாறு?

தனிப்பெற்றோரிடம் வளரும் குழந்தைகளின் மனநிலை மற்றும் நடைமுறை சிக்கல் என்பது அந்தந்தக் குடும்பச் சூழலும் உடன் யார் இருக்கிறார்கள் அவர்களின் தெளிவான மனோநிலையைப் பொறுத்து மாறுபடுவது.
அவற்றை பொதுமைப் படுத்திவிட முடியாது.

6.உங்கள் பற்றி? உங்கள் முன்னெடுப்பு பணி என்ன?

அது ஒரு பெரிய வரலாறு; அதுபோக என்னை பற்றி நானே முன்னுரை வழங்குவது அவ்வளவாக நன்றாக இருக்காது.

7.தேர்வு முறை சரியானதா? அரசு செய்ய வேண்டியது என்ன?

தற்போதிருக்கும் தேர்வுமுறைகள் என்பது தவறானது என்பது மட்டுமல்லாமல் ஆபத்தானவையும் கூட. அரசு செய்ய வேண்டியது என்றால் முதலில் அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான சமத்துவமான கல்வி வழங்கி அதன் பிறகு தேர்வுகள் நடத்த வேண்டும். அந்தத் தேர்வுகளும் போட்டி மனப்பான்மையையும் ஏற்றத் தாழ்வுகளையும் வளர்க்காத வண்ணம் இருக்க வேண்டும்.

Advertisement:
SHARE

Related posts

பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1.1லட்சம் கோடி: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

சிலம்ப கலையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

Niruban Chakkaaravarthi

முதல்வராக நாளை பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்!

Leave a Reply