2020ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவடையவிருக்கிறது. இந்த ஆண்டில் ஏராளமான பிரச்சனைகளை உலக நாடுகள் எதிர்கொண்டுள்ளன. அதேபோல் மறக்க முடியாத சில நிகழ்வுகளும் நடந்துள்ளன. அந்தவகையில் உலகில் 2020ம் ஆண்டு தொடக்கம் முதல் முடிவு வரை மறக்க முடியாத, பரபரப்பாக பேசப்பட்ட சில நிகழ்வுகள் குறித்து தற்போது பார்ப்போம்.
ராமர் கோயில் பூமி பூஜை:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று, ராமர் கோயிலுக்கான பூமி பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
துணை அதிபராகும் கமலா ஹாரிஸ்:

அமெரிக்காவில் நடந்து முடிந்த தேர்தலில் கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் துணை அதிபராகும் முதல் பெண் இவர் என்பது சிறப்புக்குரியது. அவரது வெற்றியை அமெரிக்கா மட்டுமல்லாமல், இந்திய மக்களும் கொண்டாடி வருகின்றனர்.
ஊரடங்கு:

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஒட்டுமொத்த நாட்டையும் முடக்கியது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை உருவானது. பொருளாதாரமும் வரலாறு காணாத அளவுக்கு சரிவை சந்தித்தது. கொரோனா பாதிப்பால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை:

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்க் ப்ளாய்ட், போலீசாரால் கொலை செய்யப்பட்டது உலக நாடுகளை உலுக்கியது. காவல்துறை அதிகாரி, ஜார்க் ஃப்ளாய்டின் கழுத்து மீது முழங்காலை வைத்து அழுத்தியதில் அவர் உயிரிழந்தார். இதன் காரணமாக அமெரிக்காவில் போராட்டம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர் தொழிலாளர்கள்:

கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். போக்குவரத்து சேவை திடீரென நிறுத்தப்பட்டதால் ஏராளமானோர் நடந்தே சொந்த ஊர் திரும்பினர். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்ட செய்திகளும் அவ்வப்போது வெளியானது.
ஹாங்காங் போராட்டம்:

சீனாவின் கட்டுப்பாட்டில் தன்னாட்சி பெற்ற பகுதியாக இருக்கும் ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதனிடையே ஹாங்காங் மீதான தன் கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் வகையில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா கொண்டு வந்தது. இது அங்கு பெரிய போராட்டமாக வெடித்தது.
ஷாகின் பாக் போராட்டம்:

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம், என்பிஆர் ஆகியவற்றை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது. குறிப்பாக டெல்லியின் ஷாகின் பாக் பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி முதல் 2020 மார்ச் 24ம் தேதி வரை தொடர் போராட்டங்கள் நடந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
விவசாயிகள் போராட்டம்:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.