வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட நடவடிக்கை எடுக்கக் கோரி, குடியரசுத் தலைவரை சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு விவசாய அமைப்புகள் சார்பில் டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்களுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட நடவடிக்கை எடுக்குமாறு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை, குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக மனு ஒன்றையும் அவர்கள் அளித்தனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்தித்து கோரிக்கையை முன்வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, வேளாண் சட்டங்கள் மிகவும் ஆபத்தானவை என்பதால், அவற்றை திரும்பப்பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் மனு அளித்ததாகக் குறிப்பிட்டார்.