வேதாரண்யம் மீனவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட நிவர் மற்றும் புரெவிப் புயல்கள்.
வேதாரண்யம் தாலுகாவில் உள்ள கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை புஷ்பவனம், வெள்ளைப்பள்ளம், வானவன், மகாதேவி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 10,000 மீனவர்கள் மீன்பிடி தொழிலையே நம்பியுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இங்கு வசிக்கும் பெரும்பாலான மீனவர்கள், சிறிய பைபர் படகுகள் மூலம் மீன்பிடித்து வருகின்றனர். காலையில் கடலுக்குச் சென்று மாலையில் கரை திரும்பும் இந்த மீனவர்கள், சீசன் காலங்களில் அதிகளவில் மீன்களை பிடித்து வருகின்றனர். ஆனால் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கடல்சீற்றம், புயல் தாக்கம் போன்ற பல்வேறு இயற்கை இடர்பாடுகளினால் பெரும்பாலான நாட்களில் மீன்பிடிக்கச் செல்வதில்லை. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிவர் புயல் காரணமாக 12 நாட்களும் அதைத்தொடர்ந்து உருவான புரெவி புயலினாலும் தொடர்ச்சியாக மீன்பிடிக்கச் செல்லாமல் வீடுகளிலேயே முடங்கிப்போய் உள்ளனர். இந்நிலையில் கடல் சீற்றம் காரணமாக படகுகளை கரையில் நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த இரு புயல்களின் முன்னெச்சரிக்கையினால் கரையோரம் நிறுத்தி வைத்திருந்த படகுகளை ட்ராக்டரின் மூலம் ஏற்றிச் சென்று வீட்டின் அருகிலும், சாலை ஓரத்திலும் நிறுத்தி வைத்திருந்தனர். இலங்கைலயில் புரவி புயல் கரை கடந்ததையொட்டி, அப்பகுதிகளில் ஒரே நாளில் 20 செ.மீ மழையும் கடல் சீற்றத்தால் கடல் நீரும் கடற்கரையில் படகு மற்றும் மீன் வலைகளை வைக்கும் கொட்டகைகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தாறுமாறாக ஆங்காங்கே சென்று கடற்கரை முழுவதும் சிதறிக் கிடக்கிறது. இதனை மீண்டும் எடுத்து சென்று மீன் பிடிக்கத் தயார் செய்ய மிகுந்த செலவு ஆகும் என மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் கடந்த 15 நாட்களாக மீன் பிடிக்கச் செல்லாமல், வருமானத்தை இழந்து நிற்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இயற்கை இடர்பாடுகள் நீக்கி வழக்கம்போல் மீன் பிடிக்க குறைந்தது இன்னும் 10 நாட்கள் ஆகுமென மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த சிக்கலில் மீள அரசு தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.