டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை மத்திய அரசு அழைத்துப் பேசி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக 5-ந்தேதி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், இன்று கருப்புக் கொடி ஏந்தி, திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக களம் இறங்கி இருப்பதாக தெரிவித்தார். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், டெல்லியில் போராடும் விவசாயிகளை மத்திய அரசு அழைத்துப் பேசி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் திமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், விழுப்புரம், திருச்சி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.