வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க பேச்சுவார்த்தை குழு ஏற்படுத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை உடனடியாக அகற்ற உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குத் தொடர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் ரிஷப் சர்மா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் திவாரி, டெல்லியின் எல்லைகளை அடைத்து விவசாயிகள் போராட்டம் நடத்துவதாகக் கூறினார். சாலைகளைத் திறக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விவசாயிகளை குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் வாதத்தில் அவர் வலியுறுத்தினார். விவசாயிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ். மணி, தாம் விவசாயம் செய்து வருவதாகவும், தாம் விவசாயிகளின் துன்பத்தை அறிந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். எனவே பேச்சுவார்த்தை மூலம் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விவசாயிகள் அரசு சார்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறினார். அரசு தரப்பில் சாலைகள் அடைக்கப்படவில்லை என்றும், பாதுகாப்புக்காக மட்டுமே போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் பேசிய நீதிபதிகள், மத்திய அரசின் பேச்சு வார்த்தை பலனளிக்கவில்லை என்றால் நாடு முழுவதும் உள்ள விவசாயப் சங்க பிரதிநிதிகள் அடங்கிய குழுவை உச்ச நீதிமன்றமே அமைக்கும் என்று கூறினர்.
இல்லையென்றால் விரைவில் இது நாடு தழுவிய பிரச்சனையாக மாறிவிடும் எனவும் குறிப்பிட்டனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்த கோரிய பொதுநல மனுக்கள் மீது நாளைக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கும், டெல்லி, ஹரியானா உள்ளிட்ட அரசுகளுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.