மத்திய அரசின் அம்ரூட் திட்டத்தின் கீழ் மதுரையில் செயல்படுத்தப்படும் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
மதுரை மாநகர பகுதி மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 1295.76 கோடி மதிப்பில் மத்திய அரசின் அம்ரூட் திட்டத்தின் கீழ் முல்லை பெரியாறு அணை லோயர் கேம்பிலிருந்து நாள் ஒன்றுக்கு 125 எம்.எல்.டி குடிநீர் எடுக்கப்பட்டு குழாய்கள் வழியே மதுரைக்கு கொண்டு வரும் திட்டத்திற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டிடம் மற்றும் சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, கால்நடைத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 72 கோடி மதிப்பிலான திட்டங்களையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
முதல்வர் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்த பின்னர் மதுரையில் நடைபெறும் முதல் நிகழ்ச்சி என்பதால் மதுரை மாவட்டம் முழுதும் முதல்வருக்கு பிரமாண்டமான கட் அவுட்கள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் வருகையை ஒட்டி மதுரை மாவட்டம் முழுதும் 1,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே 3 வைகை கூட்டு குடிநீர் திட்டங்கள் மற்றும் காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் வழியே 125 எம்.எல்.டி குடிநீர் மதுரை மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய திட்டத்தால் 50 ஆண்டு காலத்திற்கு தேவையான குடிநீர் சீராக கிடைக்கும் என கூறப்படுகிறது.