சுதா கொங்கரோ இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சூரரைப் போற்று திரைப்படத்தில், கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை அபர்ணாவின் பொம்மி கதாபாத்திரம் தற்போது அனைவராலும் பெரிதும் பேசப்பட்டுவருகிறது.
பிரமாண்ட சினிமாக்கள் மட்டுமே வெற்றி பெற்று கொண்டிருந்த காலத்தில் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலும் வெற்றியை தரும் என்று களத்தில் மிக எதார்த்தமான படங்களை இயக்கி வெற்றி பெற்று கொண்டிருக்கும் சுதா கொங்கரோவின் சமீபத்தில் வெளியாகியிருக்கும் சூரரைப் போற்று திரைப்படத்தை மக்கள் கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். பல திரைப்படங்களில் அழுத்தமான வசனங்களை, கதாபாத்திரம் சரியாக வெளிப்படுத்தாமல் அந்த வசனம் அந்த இடத்திலே மடிந்து போயிருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒரு கதைக்களத்திற்கு 100% பொருத்தமான, அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்க செய்ய வைப்பது இயக்குநரின் திறமையே, பல திரைப்படங்கள் தோல்வியை தழுவினாலும் அந்த திரைப்படத்தின் சில கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் என்றும் நிலைத்து இருக்கும்.
பருத்திவீரனில் பிரியாமணி, ஆறு படத்தில் த்ரிசா, ராஜாராணி படத்தில் நஸ்ரியா, உன்னாலே உன்னாலே, மெட்ராஸ், போன்ற படங்களில் பேசும் காதல் வசனங்கள் இன்னும் தமிழ் ரசிகர்கள் பேசப்படுவது போல சூரரைப் போற்று திரைப்படத்தில் நடிகை அபர்ணாவின் பொம்மி கதாபாத்திரம் பேசும் வசனங்கள் அனைத்தும் உயிரோட்டமானது என்றே கூறலாம்.

’அவிங்க கிடக்கிறாங்க’ , ’ஒம்பாட்டுக்கு போற’, ’யோ மாறா’, ’எம்புட்டு நேரம் நிக்கிறது’, ’உங்காத்தா சொல்லுச்சு என் பிள்ளைக்கு சாப்டாட்டி கிறுக்கு புடுச்சுரும்டு’, ’பூரா பயலுகளும் ஒ மாதிரிதான் இருக்காங்க’ என மதுரை வட்டார மொழியை அசத்தலா உள்வாங்கி பேசியிருக்கும் அபர்ணா,காதல் காட்சிகளில் கண்களில் பேசும் மொழி, கிராமத்து வெள்ளந்தியான, விவரமான பெண்ணாக அசத்தியிருப்பார். ’மாப்பிள்ளைய ஏன் பிடிக்கல’ என்று கேட்கிற குடும்பத்தாரிடம், ’20 பேர் என்னை வேண்டாம்னப்ப நீங்க ஏன்னு அவிங்ககிட்ட கேட்கலை’ என்று கேட்கிற வம்பான பேச்சு ’ஆம்பளதான் பொண்டாட்டிய பார்த்துக்கணுமா? பொண்டாட்டி புருசன பார்த்துக்கக் கூடாதா? என்று கேட்கிற உருத்தான பேச்சு, பேக்கரி கனவு என படத்திற்கு முக்கிய பலமாக வட்டார வழக்கு மொழிகளை கனகச்சிதமாக படத்தில் ஒலிக்கச் செய்திருப்பார் இயக்குநர் சுதா.
மலையாள திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகை அபர்ணா, ஆரம்ப காலத்தில் ஒரு பாடகர் என்பது குறிப்பிடதக்கது. தமிழில் 8 தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் பெரிதாக பேசப்படவில்லை. சூரரைப் போற்று திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்துள்ளார்.