மூச்சுக்குழாயில் சிக்கும் உணவு பொருட்களை அறுவை சிகிச்சையின்றி அகற்றி தருமபுரி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சிறு வயது குழந்தைகள் உணவுப் பொருட்களான வேர்கடலை, பட்டாணி, பாதாம், சிக்கன், எலும்புதுண்டு, பழங்களின் விதைகள், சிறு கற்கள் ஆகியவற்றை சாப்பிடும் போதோ அல்லது வாயில் வைத்து விளையாடி கொண்டிருக்கும் போதோ தவறுதலாக அத்தகைய பொருட்கள் அவர்களுக்கு தெரியாமலேயே மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரல் பகுதிகளில் சிக்கி விடுவது வாடிக்கை. இதனால் உயிழப்பும் ஏற்படும். அவ்வாறு சிக்கும் உணவு பொருட்களை இதுவரை அறுவை சிகிச்சை மூலமாக தான் மருத்தவர்கள் அகற்றி வந்தனர். இத்தகைய சிகிச்சை மருத்துவர்களுக்கு சவாலாக இருந்த நிலையில் தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நவீன மருத்துவம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து மருத்துவர் இளங்கோ கூறும் போது எந்தவித அறுவை கிசிச்சையுமின்றி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் மூலம் மூச்சுக்குழாயில் சிக்கிய உணவுப் பொருட்களை கண்டறிந்து எண்டாஸ்கோப் மூலம் அகற்றுவதாக தெரிவித்தார். இதில் 7 மாத குழந்தை முதல் அதிகபட்சமாக 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு 12 பேருக்கும், 2020 ஆண்டு 33 பேருக்கும், இம்மாதம் 1 குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு உணவு பொருட்களை அகற்றியதாக கூறினார். 2 மணி நேரத்திற்குள் சிகிச்சையை முடித்து, 6 மணி நேரத்திற்குள் வீட்டிற்கு அனுப்பி விடுவதாகவும், இந்த சிகிச்சையினால் எந்தவித வலியோ, தழும்போ ஏற்படாது என்றும் கூறினார்.