கொரோனா அச்சுறுத்தலால் குறைக்கப்பட்டுள்ள ரயில் சேவைகளை முழுமையாக வழங்குவதற்கான சரியான தேதியை தற்போது அறிவிக்க முடியாது என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ரயில் மற்றும் விமான சேவைகள் குறைந்த அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் சேவையில் சிறப்பு ரயில்கள் மட்டுமே தற்போது வரை இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே வழக்கமான ரயில்கள் எப்போது இயக்கப்படும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இது தொடர்பாக தெரிவித்த ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ், நாடு முழுவதும் தற்போது 1089 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கொரோனா காலத்தில் தற்போதும் கூட சிறப்பு ரயில்களில் 30 முதல் 40% இடங்கள் நிரம்பாமல் உள்ளன. இது கொரோனா குறித்த பயம் மக்களிடம் இன்னும் உள்ளதை குறிக்கிறது; தற்போது கொல்கத்தாவில் 60% மெட்ரோ ரயில் சேவையும் மும்பை 88% மற்றும் சென்னையில் 50% புறநகர் ரயில் சேவையும் வழங்கப்பட்டு வருகிறது. ரயில்களை முழுமையாக இயக்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆனால் வழக்கமான ரயில் சேவைக்களை வழங்குவதற்காக சரியான தேதியை தற்போது அறிவிக்க முடியாது என தெரிவித்தார்.
மேலும் நடப்பு நிதியாண்டில் இதுவரை பயணிகளின் வருவாயிலிருந்து ரயில்வேயின் வருமானம், 4,600 கோடி ரூபாயாக உள்ளது இது 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 15,000 கோடி ரூபாயாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு இதுவரை பயணிகள் பிரிவில் இருந்து வருவாய் 87 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.