முதுமலை வனப்பகுதிகளுக்குள் சுற்றுலா பயணிகள் வாகன சவாரி சென்ற போது, வரிசையாக நின்ற யானைகளைக் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர்.
முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியிலிருந்து வனப்பகுதிகளுக்குள் வனத்துறை வாகனம் மூலம் சுற்றுலா பயணிகளைக் காட்டுக்குள் அழைத்துச் சென்று வனவிலங்குகளைக் காணும் வகையில் வாகன சவாரி இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், அடர் வனப்பகுதிகளுக்குள் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மான், யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, உள்ளிட்ட வனவிலங்குகளையும் அரிய வகை பறவைகளையும் கண்டு ரசிக்கின்றனர் .
மேலும் கடந்த சில மாதங்களில் முதுமலையில் நிலவி வந்த வறட்சி காரணமாக யானைகள் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த நிலையில், தற்போது கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக முதுமலை பசுமைக்கு திரும்பி உள்ளதால் மீண்டும் யானைகள் முதுமலைக்கு திரும்பியுள்ளன.
இந்த நிலையில் வனப்பகுதிகளுக்குள் அழைத்துச் செல்லப்பட்ட சுற்றுலா பயணிகள் ஒரே இடத்தில் யானைக் கூட்டங்களைக் கண்டு ரசித்தனர். வரிசையாக நின்ற யானைகள் மற்றும் வாகனத்தைக் கடந்து சென்ற யானைகளைக் கண்டு ரசித்து சுற்றுலாப் பயணிகள் குதூகலமடைந்தனர். பிரதமரின் வருகைக்குப் பின்பு முதுமலை பகுதிக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
—-சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: