புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வகை பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நிவர் மற்றும் புரெவி புயலால் கடலூர் மாவட்டத்தில், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அணுக்கம்பட்டு கிராமத்திற்குச் சென்ற முதலமைச்சர், அங்கு மழை நீரில் மூழ்கிய விளை நிலங்களை நேரில் பார்வையிட்டார். விளைநிலத்திற்குள் இறங்கி, பயிர்களின் நிலையை ஆய்வு செய்தார். மேலும், பயிர் பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். இதனையடுத்து, ஆலப்பாக்கம் என்ற இடத்துக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, அங்கு கனமழை காரணமாக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர், வீராணம் வெள்ளியங்கால் ஓடை பகுதிக்கும், வல்லம்படகு பகுதிக்கும் சென்று முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். வல்லம்படகு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். பின்னர் பேசிய அவர், கடலூர் மாவட்டத்தில் வாழை, நெல், கடலை, மிளகாய் உள்ளிட்ட பல பயிர்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இழப்பை சந்தித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.