சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல், சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தனியார் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து வந்த சித்ரா, நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகை சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை இன்று, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. அதன் பிறகு சித்ராவின் உடல், அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சித்ராவின் உடல் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சித்ரா உடலுக்கு ஏராளமான ரசிகர்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து நடிகை சித்ராவின் உடல், சென்னை கோட்டூர்புரத்திலிருந்து அடையாறு வழியே, பெசன்ட் நகர் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில், சக நடிகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். பெசன்ட் நகர் மயானத்தில் சித்ராவின் உடலுக்கு, கண்ணீர் அஞ்சலி செலுத்திய பெற்றோர், மற்றும் உறவினர்கள், பின்னர் உடலை தகனம் செய்தனர்.
நடிகை சித்ராவின் மரணத்தில், பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படும் நிலையில், அவர் தற்கொலை தான் செய்து கொண்டார் என, பிரேத பரிசோதனைக்கு பின்னர், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சித்ரா கடைசியாக தங்கியிருந்த ஓட்டல் ஊழியர்கள் மூவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Advertisement: