விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் செயற்கைகோள் திட்டத்தை, செயல்படுத்துவதற்கான பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக, அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து , சிஎம்எஸ் 1 செயற்கைகோள் விண்ணுக்கு ஏவப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த 4 நாட்களில் திட்டமிட்டமிட்டபடி, புவிசார் ஒத்திசைவு சுற்றுப்பாதையில் இந்த செயற்கைகோள் நிலைநிறுத்தபடும் என்றார். பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட், அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களுக்கு இடையே விண்ணில் ஏவப்படும், என்றும் சிவன் குறிப்பிட்டார். இந்த ராக்கெட் இந்தியாவின் முதலாவது புவி ஆய்வு செயற்கைகோளை தாங்கிச் செல்லும் என தெரிவித்த அவர், இதனை பிக்செல் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்தார். இது தவிர இந்த ராக்கெட்டில் விண்வெளி குழந்தைகள் என்ற திட்டத்தின் கீழ், மாணவர்கள் கட்டமைத்த செயற்கைகோளும் விண்ணில் ஏவப்படும், என்றும் குறிப்பிட்டார். ஆதித்யா எனும் சூரியனுக்கான செயற்கைகோள் அனுப்பும் திட்டத்தில், இஸ்ரோ பணிகள் தீவிரம் அடைந்துள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்