முக்கியச் செய்திகள் இந்தியா

மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது: அனைத்திந்திய விவசாய சபை அறிவிப்பு!

டெல்லியில் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது என அனைத்திந்திய விவசாய சபையின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் 14-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது. விவசாயிகளுடன் இன்று 6-ம் கட்டமாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த இருந்தது. இந்நிலையில், விவசாய தலைவர்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றிரவு சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய விவசாய சபையின் பொதுச்செயலாளர் ஹன்னன் மொல்லா, விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது என்றார். விவசாய தலைவர்களிடம் அரசின் முன்மொழிவு ஒன்று இன்று வழங்கப்படும் என தங்களிடம் மத்திய அமைச்சர் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். அரசின் முன்மொழிவு குறித்து விவசாய தலைவர்கள் ஆலோசிப்பார்கள் என்றும், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற தயாராக இல்லை எனவும் ஹன்னன் மொல்லா கூறினார். டெல்லி- அரியானாவின் சிங்கு எல்லை பகுதியில் இன்று விவசாயிகளிடையே ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று மாலை சந்திக்கின்றனர். காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் சரத்பவார் ஆகியோர் அடங்கிய குழு, குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளது. அப்போது, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதன் மூலம் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தவுள்ளனர்.

Advertisement:

Related posts

பள்ளிகள் திறப்பு; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

Jayapriya

கொரோனா பணிகளில் பயிற்சி மருத்துவர்கள்!

மேற்கு வங்கம், அசாமில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு!

Gayathri Venkatesan

Leave a Reply