மதுரை எய்ம்ஸ் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தவறான தகவல் அளித்த மத்திய அரசு அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டதாக சுட்டிக்காட்டி உள்ளார்.
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை என்றும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க போதுமான நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 200 ஏக்கர் நிலம் ஏற்கனவே மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார். மத்திய அரசு கூடுதலாக 22 ஏக்கர் நிலம் கேட்ட நிலையில் அந்த இடமும் அடையாளம் காணப்பட்டு கையகப்படுத்தப்பட்டு விட்டதாக தெரிவித்தார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஜப்பான் நிறுவனத்திடம் கடன் பெறுவதற்கான ஒப்பந்தங்களுக்கான முன் வரைவு தயாரிக்கும் பணிகள் 2021 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள்ளாக முடிவடையும் என்று கூறினார்.
அதன் பிறகு பணிகள் தொடங்கப்பட்டு 45 மாதங்களில் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்றும் உறுதி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், நிலம் கையகப்படுத்தவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தவறான தகவலை அளித்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறினர்.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பெரும்பாலான நிலத்தை தமிழக அரசு ஒப்படைத்து விட்ட நிலையில், அதுதொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்காத மத்திய அரசின் போக்கு வருத்தமளிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.