தற்போது ஏலே படத்தில் நாயகனாக நடித்து கொண்டிருக்கும் மணிகண்டனின் பன்முகதன்மையை பலரும் அறியாததே, நரை எழுதும் சுயசரிதை என்ற படத்தை எழுதி இயக்கியுள்ளார். மேலும் வில்லா 2 ,விக்ரம் வேதா, விஸ்வாசம், தம்பி உள்ளிட்ட படங்களின் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். மேலும் காலா, காதலும் கடந்து போகும், விக்ரம் வேதா, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தும் உள்ளார்.
நேர்காணல்: மா.நிருபன் சக்கரவர்த்தி, நியூஸ்7 தமிழ்
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வளரும் ஆளுமைகளும் News7 தமிழின் 7 கேள்விகளும் இந்த வார பகுதியில் மணிகண்டனின் பதில்கள்.
1.கதாசிரியர், நடிகர், இயக்குநர் இதில் தங்களுக்கு மிகவும் பிடித்த பணி?
முதலில் நான் நடிக்க வந்தப்ப வாய்ப்பு கேட்க போகும் போதெல்லாம் நிறைய அவமானங்கள சந்திச்சிருக்கேன். இப்ப இருக்க அளவு அப்ப மனப்பக்குவம் கிடையாது. எதாவது சொன்னாங்கன்னா அப்டியே உடஞ்சிடுவேன், அழுதுடுவேன். அப்ப எனக்கு ஒரு 19,20 வயசு இருக்கும். அதுக்கப்பறம் அசிஸ்டெண்ட் டைரக்டரா போனேன். அதுக்கு காரணம் என்னனா நமக்கு அந்த சமயத்துல (வயசுல) நமக்கு என்ன சரியா வரும்னு தெரியாது. ஒரு 3, 4 வருசம் அப்படியே போய்ட்டு இருந்தது. நடிக்க வந்துட்டா அடடா எழுதறத டைரக்க்ஷன ரொம்ப மிஸ் பண்றதா தோணும். சினிமாவ பொருத்த வர எல்லாம் ஒன்னுதான். எல்லா நடிகனுக்கும் ஒரு டைரக்டர் இருப்பார். அதேமாதிரி எல்லா டைரக்டர்குள்ளயும் ஒரு நடிகன் இருப்பான்.

2.வளரும் கலைஞர்களை பிரபலங்கள் என்று சொல்லப்படும் சிலர் கடுமையான விமர்சிப்பது பற்றி?
யாரும் வளரும் கலைஞர்களை விமர்சிக்கிறதா தெரியல… நீங்க யார பத்தி கேக்குறிங்கன்னு தெரியல.. என்னோட கருத்து என்னனா மக்கள் முன்னாடி நீங்க உங்க திறமை, Product எடுத்து கொண்டுபோய் வச்சிங்கன்னா அது கண்டிப்பா விமர்சனத்துக்குள்ளாகும். விமர்சனம் என்னோட வளர்ச்சிக்கு உபயோகமா இருக்குனா அதை நான் கண்டிப்பா ஏத்துப்பேன். நிறைய விமர்சனங்கள்
என்னோட எழுத்துலயும் சரி நடிப்புலயும் சரி வந்துருக்கு. அதெல்லாம் என்னோட வளர்ச்சிக்கு நிறைய பயன்பட்டிருக்கு. ரொம்ப கோவமா வந்த விமர்சங்களையும் தான் சொல்றேன். நம்ம மேல ஏன் இப்படி விமர்சனம் வக்கிராங்கன்னு பாக்கும்போது நம்ம பக்கம் தப்பு இருக்குன்னு புரிய ஆரம்பிச்சது. அதுக்கப்பறம் அதை மாத்திகிட்டோம்னா அது நம்மள வளரதான் வைக்கும், அதுமாதிரி விமர்சனங்கள் என்னை வளரத்தான் வச்சிருக்கு, சிலபேரு மனச புண்படுத்துறதுக்காக விமர்சனம் பண்றாங்க, அது அவங்களோட கேரக்ட்ரதான் காட்டுது. அதுக்காக நாம
வருத்தப்படனும்னோ, நம்மல அவமானப்படுத்தனும்னு அவங்களோட நோக்கம் நிறைவேறிடுச்சுனு அர்த்தம் இல்ல.

3.ஒரு படத்தின் வெற்றி எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது?
ஒரு படம் வெற்றியடைவதற்காக கரெக்டானா ஃபார்முலாவை இதுவரை யாரும் டிசைன் பண்ணதில்ல, யாருக்கும் தெரியவும் தெரியாது. படம் வெற்றியடைவது ஒரு காரணத்தை சார்ந்தது கிடையாது. நல்ல, கதை, ஃபர்ஃபார்மன்ஸ் இருக்க படம் கூட தோத்து போயிடுது. வசூல் ரீதியா பெரிய சாதனை படைத்த படங்கள்லாம் கண்டெண்ட் ரீதியா கரெக்டான படங்களானு கேட்டா நம்ம கொஞ்சம் யோசிச்சே பதில் சொல்ல வேண்டியதா இருக்கு. ஆனா மிகப்பெரிய அளவுல வசூல் எப்படி நடக்குதுனா அதுக்கு விளம்பரம் ஒரு காரணமா இருக்கலாம். முக்கியமா எத்தனை
தியேட்டர்ல ரிலீஸ் ஆகுது.
எந்த சமயத்துல ரிலீஸ் ஆகுது அதை பொருத்தும் இருக்கு.. படம் ரிலீஸ் ஆகுற சமயத்துல ஸ்ட்ரைக் இல்ல வெள்ளம் அதுமாதிரி பேரிடர் வந்துட்டா இதுகூட படத்தோட வெற்றி, தோல்விய தீர்மானிக்கிற ஒரு காரணியா அமைஞ்சிடுது. எல்லா படத்துக்குமோ சின்ஸியர் எஃபெக்ட் போட்டுதான் வேலை செய்யுறோம். ஆனா பல்வேறு காரணத்தால அது வேற வேற ரிசல்ட் தருது. நாம அதுல இருந்து கத்துக்கணும். வெற்றிக்குனு தீர்க்கமான ஃபார்முலா இதுவரை எதும் கிடையாது.

4.தங்களுக்கு பிடித்த நடிகர், இயக்குநர், எழுத்தாளர்?
பிடித்த நடிகர், இயக்குநர் எழுத்தாளர் மிக பெரிய பட்டியல், அதை ஒரு சின்ன வட்டத்துக்குள் சுருக்க முடியாது. முன்னாடி ஒரு காலத்தில் அப்படி இருந்தேன் குறிப்பிட்ட எழுத்தாளர் புத்தகத்தை வாசிப்பது, குறிப்பிட்ட இயக்குநரின் படத்தை பார்ப்பது என ஆனால், இப்போது அது கொஞ்சம் விரிவாகியுள்ளேன். பிடிச்சவங்க லிஸ்ட் ரொம்ப அதிகம்.

5.சித்தாந்தங்களை சினிமாவில் வெளிப்படுத்தும் போது எவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு?
ஒரு குறிப்பிட்ட சித்தாந்தங்களை வச்சி சினிமா எடுத்தோம்னா அதை எதிர்ப்பவங்களும், ஆதரிப்பவங்களும் இருக்க தான் செய்வாங்க.. அதனால கண்டிப்பா அதுல உடன்பாடு இல்லாதவங்க எதிர்க்கிறத தவிர்க்க முடியாத ஒன்னுதான். அதுக்கு நாம தயாரா இருக்கணும். ஒரு சித்தாந்தத்தை சொல்வதற்காகவே ஒரு படத்தை எடுக்குறதுல எனக்கு உடன்பாடு இல்ல. சமீபகாலமா அதை சில படங்களில் வெளிப்படைய திணிக்கிறத நான் பார்க்கிறேன். அது கொஞ்சம் அயர்ச்சியாதான் இருக்கு. இப்படி சித்தாந்தத்தை சொல்வதற்காகவே ஒரு படத்தை எடுக்கிறது
அந்த கருத்தை ஏற்படைபவர்களுக்கு கூட சொல்ற விதத்தால கொஞ்சம் களைப்படைய செய்ய வாய்ப்பு இருக்கின்றது என்னோட கருத்து.

6.திரைத்துறை பயணம் பற்றி?
விஜய் டிவி கலக்கபோவது நிகழ்ச்சியில மிமிக்கிரி ஆர்டிஸ்டா என்னோட மீடியா பயணம் ஸ்டார்ட் ஆச்சு. எனக்கு குரல் சம்மந்தப்பட்ட துறைல தான் திறமை இருக்குனு நெனச்சிட்டு இருந்தேன். நான் இஞ்ஜினியரிங் படிச்சிருந்தேன். இந்த பக்கம வருவேன்னு எதிர்பார்க்கவேயில்ல இது சும்மா ஒரு பொழுதுபோக்கு அப்படித்தான் நெனச்சிட்டு இருந்தேன்.அதுக்கப்பறம் நிறைய ஸ்டேஜ் ஷோவா பண்ணிட்டு இருந்தேன். என்னோட காலேஜ் படிக்கிறப்ப பார்ட் டைம்மா ரேடியோ ஜாக்கியா வேலை பார்த்தேன்.
ரேடியோ ஜாக்கி வேலை ஒரே மாதிரி இருக்குனு அசிஸ்டண்ட் டைரக்டரா ஜாயின் பண்னேன். நெறைய ரிலீஸ் ஆகாத படத்துக்கு அசிஸ்டண்ட் டைரக்டரா வொர்க் பண்ணிருக்கேன். அதுகப்பறம் குரல்தான் நம்ம அடையாளம்ன்னு திரும்பவும் டப்பிங் ஸ்டார்ட் பண்னேன். டிஸ்கவரி, கார்ட்டூன், தெலுங்கு டூ தமிழ் படத்துக்கு டப்பிங்னு கொடுத்துட்டு இருந்தேன். அதுக்கப்பறம் நாளைய இயக்குநர் க்ஷோல
என்னோட ஃபிரண்ட் படத்துக்கு வசனம் எழுதுனேன் அதோட நடிக்கவும் செஞ்சேன். இங்க எனக்கு நிறைய இயக்குநர்களோட நட்பு கிடைச்சிது. அதிலிருந்து அவங்களோட படத்துக்கு டிஸ்கசன், அஸிஸ்டெண்ட் டைரக்டரா வொர்க் பண்ண ஸ்டார்ட் பண்ணேன்.
பிற்பாடு நலன் சார் மூலமா நடிக்க வாய்ப்பு கிடைச்சது. ’காதலும் கடந்துபோகும்’ படத்துல முரளின்ற டிரைவர் கேரக்டர் விஜய் சேதுபதி சார் கூட பண்னேன். அது முடிச்சதும் 8 தோட்டாக்கள் ஸ்ரீகணேஷ் படத்துல நடிச்சேன். அவர் நாளைய இயக்குநர் மூலமாதான் எனக்கு அறிமுகமானார். அதுகப்பறம் விஜய் சேதுபதி சார் என்னோட விக்ரம் வேதா படத்துல ஒரு சின்ன கேரக்டர் பண்ணனும் போய் பண்ணிட்டு வரியான்னு கேட்டாரு.. நான் அங்க போனதுகப்பறம் வசனம் எழுத ஆள் தேடிட்டு
இருக்கோம் விஜய் சேதுபதி சொன்னாரு நீங்க வசனம் நல்லா எழுதுவீங்கன்னு? ஒரு பத்து சீனுக்கு எழுதி எடுத்துட்டு வாங்கன்னு சொன்னங்க. நான் எழுதி எடுத்துட்டு போனதும் அவங்களுக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு.. அப்படிதான் எனக்கு அந்த படத்துக்கு வசனம் எழுதுற வாய்ப்பு கிடச்சுச்சு, விக்ரம் வேதா பண்ணிட்டு இருந்த டைம்ல எனக்கு ரஞ்சித் அண்ணா ஆஃபீஸ்ல இருந்து கால் வந்துச்சு.
இந்த சமயத்துலயே நான் ஒரு யூடியூப் சேனல் வச்சி நடத்திட்டு இருந்தேன். அதோட புரோகிராம்லாம் பாத்துட்டு ரஞ்சித் அண்ணா எனக்கு கால் பண்ணி பாராட்டி
பேசிருக்காரு. அதை நியாபகம் வச்சி ரஞ்சித் அண்ணா எனக்கு கால் பண்ணாரு. அதுக்கப்பறம் படத்தோட ஆடிசன்ல கலந்துகிட்டேன். அது அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதனால காலால ’லெனின்’னு ஒரு கேரக்டர் வாய்ப்பு கிடைச்சது. புஷ்கர் காயத்ரியோட அசிஸ்டண்ட்டா ஒர்க் பண்ணவங்கதான் ஹலிதா. அவங்ககிட்ட ஒரு கதை இருந்தது. அதை முன்னாடி என்கிட்ட சொல்லிருந்தாங்க அது எனக்கு பிடிச்சிருந்தது. சில்லுக்கருப்பட்டி ஸ்டார்ட் பண்றப்ப ஒரு கேரக்டர் இருக்கு பண்றியான்னு கேட்டாங்க.. அதனாலதான் எனக்கு சில்லுக்கருப்பட்டி சாத்தியமானது.. இப்படித்தான்.
7. 2021 தேர்தல் பற்றி?
அதுக்காக நானும் எல்லோரையும் போல ஆவலா காத்திருக்கிறேன்.
நேர்காணல்: மா.நிருபன் சக்கரவர்த்தி