குடிபோதையில், பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற காவலர் விடுவிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில், காவலர் ஒருவர், அங்கிருந்த நரிக்குறவர் இன பெண்ணை பாலியல் இச்சைக்கு இணங்குமாறு வற்புறுத்தியும், அதற்கு பணம் தருவதாகவும் கூறி தொல்லை செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இது குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர், சம்பவம் நிகழ்ந்த அன்றே சம்பந்தப்பட்ட காவலருக்கு எவ்வாறு ஜாமீன் வழங்கப்பட்டது? என கேள்வி எழுப்பினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கில் சங்கரன்கோவில் நீதித்துறை நடுவர், ஜாமீன் வழங்கியது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் படியும் உத்தரவிட்டனர். பேருந்து நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். சமூக வலைத்தளங்கள், ஊடகங்களில் சுட்டிக்காட்டப்படும் தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக, தனி அமைப்பை ஏன் உருவாக்கக் கூடாது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது குறித்து தலைமைச் செயலாளர், உள்துறை செயலர், காவல்துறை தலைவர் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.