பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 17 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நோய் பாதிப்பை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே கடந்த சில தினங்களாக பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்த கொரோனாவின் புதிய பிறழ்வு சாதாரண கொரோனாவை காட்டிலும் 70% பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாட்டுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் இந்த வைரஸ் பாதிப்பால் பிரிட்டனுக்கான விமான சேவைகளை பல நாடுகள் நிறுத்தியுள்ளதோடு அந்நாட்டு விமானங்கள் நுழையவும் தடை விதித்துள்ளன. இந்நிலையில் இந்த புதிய கொரோனா வைரஸ் பிறழ்வு குறித்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்ட இயக்குனர் மைக்கேல் ரியான், இந்த தொற்றுநோய்களின் வெவ்வேறு பிறழ்வுகளின் மிக அதிகமான மாசுபடுத்தும் வீதத்தை கண்டறிந்தோம், அதை நாங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் என தெரிவித்தார். இருப்பினும் இந்த நிலைமையை தொடர்ந்து கட்டுக்குள் கொண்டுவர தொடர்ந்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.