2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்கு சோனியா காந்தி, மன்மோகன் சிங்கின் தலைமை தான் காரணம் என முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி எழுதிய சுயசரிதை புத்தகத்தில் அவர் விமர்சித்திருப்பதாக வெளியான தகவல் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும் 50 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் அனுபவம் கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவராக விளங்கிய பிரனாப் முகர்ஜி எழுதிய சுயசரிதை புத்தகம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாக இருக்கிறது.
இதில் 2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விக்கு காரணமாக சோனியா காந்தியையும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் அவர் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
2004ல் தான் பிரதமராகியிருந்தால் 2014ல் காங்கிரஸ் கட்சிக்கு இத்தோல்வி அமைந்திருக்காது என கட்சித் தலைவர்கள் சிலர் தன்னிடம் தெரிவித்திருந்ததாகவும் அந்த புத்தகத்தில் பிரனாப் முகர்ஜி கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இத்தகவல்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சல்மான் குர்ஷித் ஆகியோரிடம் இது தொடர்பாக கேட்ட போது புத்தகம் வெளியாகி அதனை முழுமையாக படித்தால் மட்டுமே கருத்து கூற இயலும் என தெரிவித்துவிட்டனர்.
Advertisement: