90களில் லேடி சூப்பர் ஸ்டார் என்று புகழப்பெற்ற நடிகை விஜயசாந்தி இன்று பாஜகவில் இணைந்தார்.
சென்னையில் பிறந்து, படித்து வளர்ந்தவரான நடிகை விஜயசாந்தி கடந்த 40 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் சுமார் 180 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என்றும் தமிழ் மற்றும் தெலுங்கில் லேடி அமிதாப் என்றும் அறியப்படுகிறார். சிறந்த நடிகைக்கான தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார் விஜயசாந்தி.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்த நடிகை விஜயசாந்தி நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நிலையில் இன்று காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் அடிப்படையில் பாஜக மிகப்பெரும் மாற்று சக்தியாக தெலங்கானாவில் உருவெடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனடிப்படையிலேயே அவர் பாஜகவில் இணைந்திருக்கலாம் என அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.
1997ல் முதல் முறையாக பாஜகவில் இணைந்த விஜயசாந்தி அதன் பின்னர் டிஆர்எஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளிலும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரா, தெலங்கானா, தமிழகம் என 3 மாநிலங்களிலும் விஜயசாந்திக்கு பாப்புலாரிட்டி இருப்பதால் வரும் மாநில சட்டமன்ற தேர்தல்களில் அவரை பாஜக பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.