நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான பருவ நெல் சாகுபடி பாசனத்துக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
புரவி புயல் தாக்கத்தல் கனமழை பெய்ததை அடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மணிமுத்தாறு அணையின் மொத்த கொள்ளளவான 118 அடியில் 102.35 அடி வரை தண்ணீர் நிரம்பி உள்ளது. எனவே, பிசான பருவ நெல் சாகுபடிக்கு அணையை திறக்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விவசாயிகளின் நலன் கருதி 12,018 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்வகையில் 120 நாட்கள் வரை தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து இன்று மணி முத்தாறு அணையில் இருந்து பாசனதுக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் முருகையா பாண்டியன் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
பாசனதுக்காகத் திறந்து விடப்பட்ட தண்ணீரை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம் பகுதி விவசாயிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம், சாத்தான்குளம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் பயன்பெறுவார்கள்.