நீலகிரி மாவட்டம் குன்னூரில் நெருப்பு மூட்டி, குளிர் காய்ந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக தொடர் மழையால் கடும் குளிர் நிலவி வருகிறது. குன்னூர் அருகேயுள்ள அம்பிகாபுரம் பகுதியில் வசித்து வருபவர் கஜபதி. இவர் வீட்டிற்கு வந்த உறவினர்கள் கடும் குளிரால் அவதியடைந்த நிலையில் வீட்டிற்குள் தீ மூட்டி குளிர் காய்ந்தனர். மேலும் அதிகளவில் குளிர் காய்வதற்கு தீயில் வார்னிஸ் என்னும் திரவத்தை ஊற்றினர். அதிலிருந்து வந்த விஷவாயு வீடு முழுவதும் பரவியது. இதனால் அந்த வீட்டில் இருந்த கஜபதி, கலாவதி, மகேந்திரன் ஆகியோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதுடன், மயக்கமடைந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வீட்டின் அருகே இருந்த அக்கம்பக்கத்தினர் வெகு நேரம் ஆகியும் வீடு திறக்கப்படாத நிலையில் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது வீட்டின் அறை முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்த நிலையில் மூன்று பேரும் மயங்கி கிடப்பதை பார்த்தனர். உடனடியாக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாதிக்கப்பட்டோரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கலாவதி என்ற பெண் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குன்னூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.