மதுரை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் நிதி நிறுவனம் நடத்தி 40 கோடி மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த தரவிஸ் அக்பர், அவரது மனைவி ரென்சியா பாத்திமா, மற்றும் கருப்புசாமி உள்ளிட்ட 7 பேர் சேர்ந்து உதயநிலா, உதயம், உதயதாமரை என 3 நிதி நிறுவனங்களை கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தொடங்கி நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் மாதந்தோறும் வட்டி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த நிறுவனங்களில் ரூ.10 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.2 லட்சம், ஒரு லட்சம் என ஏலச்சீட்டுகளும் நடத்தி வந்துள்ளனர். நிதிநிறுவன மோசடி கும்பல் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கிளை நிறுவனங்களையும் நடத்தி வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிதி நிறுவனத்தை நம்பி நூற்றுக்கணக்கான மக்கள் பணத்தை முதலீடு செய்தனர். அதேபோல் மாத சீட்டிலும் பணம் கட்டி வந்தனர். இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென இந்த நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். இதேபோல் தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் பாதிக்கப்பட்ட 550 பேர் திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் 40 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் உத்தமபாளையம் அருகே உள்ள வீட்டில் பதுங்கியிருந்த தர்விஸ் அக்தர், அவருடைய மனைவி ரென்சியா பாத்திமா, கருப்பசாமி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 7 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.