இந்தியா வணிகத்தில் படிப்படியாக முன்னேறி வருகிறது. கொரோனாவால் பொருளாதாரம் முடங்கிய பிறகு, அதனை மீட்பதற்கான வேலைகளில் அரசின் கவனம் திரும்பியுள்ளது. தொழில் செய்வதற்கு மிகச் சிறந்த இடமாக மாற இந்தியா செய்ய வேண்டிய 9 வழிகள் பற்றி பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். அதில்,
முதலாவதாக, எந்த துறைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே முக்கியமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக நலிவடைந்த துறைகளிலேயே அதிக கவனம் தேவை என வல்லுநர்கள் கூறுகின்றனர். தொலைதொடர்பு, மின்னணு உள்ளிட்ட துறைகள் உலக வணிகத்தில் 70% பங்காற்றுகின்றன. ஆனால் இந்தியா 0.7% மட்டுமே பங்கு அளிக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இரண்டாவதாக, அந்த துறைகள் என்னென்ன சவால்களை எதிர்கொள்கின்றன என்பது பற்றி ஆராய வேண்டும் என்கின்றனர். சில துறைகள் அதிக வருவாயை எடுக்கலாம். ஆனால் இறக்குமதியை பெருமளவில் சார்ந்திருப்பதால் அதன் நிகர வருவாய் குறைய வாய்ப்புள்ளது. அதனால் உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களையும் சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறுகின்றனர்.

மூன்றாவதாக, இந்தியாவின் முன்னணி துறைகளில், உலக நிறுவனங்களின் பங்கும் இருக்க வேண்டும். இந்த நிறுவனங்களின் உதவியால் புதுப்புது தொழில்நுட்பங்களை பயன்படுத்தி துறைகளை பெரிய அளவில் உயர்த்த முடியும். 1980களில் இந்திய ஆட்டோமொபைல் துறைகளின் வளர்ச்சியில் சுசுகி முக்கிய பங்கு வகித்தது.
நான்காவதாக, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு இடையே ஒற்றுமை இருக்க வேண்டும் என கூறுகின்றனர். திட்டங்களை முறையாக செயல்படுத்த அரசுடன் இணைப்புப் பாலமாக இருக்க ஒரு அதிகாரியை நியமித்தால் சிறந்த பலன் இருக்கும். இதனால் வேலைகளிலும் எந்த தொய்வும் ஏற்படாது.
ஐந்தாவதாக, திட்டங்களை செயல்படுத்துவதற்கு காலதாமதம் இல்லாமல் உடனடியாக அனுமதி அளித்தால் மட்டுமே, உலகளவில் உள்ள முதலீட்டாளர்களை அதிக அளவில் ஈர்க்க முடியும் என்கின்றனர். சீனா உள்ளிட்ட நாடுகள் இனி வரும் திட்டங்களுக்காக ஏற்கெனவே அனைத்தையும் தயாராக வைத்துள்ளன. இதன்மூலம் முதலீட்டாளர்களும் முதலீடுகளை அதிகரிக்க நிறைய வாய்ப்பு கிடைக்கும்.
ஆறாவதாக, தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் துறைமுகங்களுக்கு உடனடியாக எடுத்து செல்லப்பட வேண்டும். கடற்கரைகளுக்கு அருகிலேயே தொழில் நிறுவனங்களை அமைத்தால் இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏழாவதாக, இறக்குமதி வரி கூட்டமைப்பை மதிப்பாய்வு செய்தால் நிறுவனங்கள் மேலும் வளரும் என கூறுகின்றனர். இந்தியாவில் 90% இறக்குமதிகள் 10% வரியில் மட்டுமே நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எட்டாவதாக, கொள்கைகளை மேம்படுத்த வேண்டும். மிகவும் பழமையான கொள்கைகளை தவிர்த்தால் முழுமையாக தன்னிறைவு அடையும். தெளிவான வார்த்தைகளை பயன்படுத்துவதன் மூலம் வரி சட்டங்களில் தேவையற்ற குளறுபடிகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
ஒன்பதாவதாக, பிரச்சனைகளை விரைவாக சரிசெய்வதற்கான அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். முதலீட்டாளர்களுக்கு இடையே மோதல் வரும்போது அது நீதிமன்றம் வரை செல்லும். அதுபோன்ற சமயத்தில் நீதிமன்றத்தில் வழக்குகள் முடிய காலதாமதம் ஆகும். அதனால் பணிகள் முடிவடையும் காலமும் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.