ஏரல் வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் தீயில் கருகி சேதம் அடைந்தன.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிறுதொண்டநல்லூரில் ஏரல் வட்டாட்சியர்
அலுவலகம் உள்ளது. இந்த வட்டாட்சியர் அலுவலகத்தின் பின்புறத்தில்
தனியாருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. அதில் தென்னை மரம் மற்றும் வாழை மரங்கள் உள்ளன. இந்த தென்னை மர தோப்பில் அதிக அளவில் கருவேல மரங்கள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று மாலை தென்னந்தோப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த ஆறுமுகநேரி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சித்தனர். சம்பவம் குறித்து அறிந்ததும் ஏரல் வட்டாட்சியர் நேரில் வருகை தந்து பார்வையிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க முடியாமல் உடனே கூடுதலாக தூத்துக்குடி சிப்காட் மற்றும் சாத்தான்குளத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த தீ விபத்தில் 500க்கும் மேற்பட்ட வாழைகள், 50க்கும் மேற்பட்ட தென்னை
மரங்கள் தீயில் எரிந்து சேதமானது. தென்னை மரங்களுக்கு இடையே கருவேல மரங்கள்
அதிகமாக வளர்ந்த காரணத்தினால் தீ வேகமாக பரவியது முதற்கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ஏரல் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ம. ஸ்ரீ மரகதம்