அரியலூரில் தலையில் கரகம் சுமந்தபடி வயலில் நாற்று நட்டு மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் பெரியதிருகொணம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவர் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் கிருஷ்ணவேணி காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். விவசாயம் மற்றும் கிராமிய கலைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவி நினைத்துள்ளார். அதனால் கரகத்தை தலையில் சுமந்து வயலில் நடனமாடி நாற்று நட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சுமார் ஒரு மணி நேரமாக அவர் இதனை செய்து அசத்தியுள்ளார்,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாணவியை வெகுவாக பாராட்டியுள்ளனர். அழிந்து வரும் கிராமிய கலைகள் மற்றும் விவசாயம் இரண்டையும் காக்கும் விதமாகவும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கடந்த 3 நாட்களாக வயலில் இறங்கி இதுபோன்ற பயிற்சி மேற்கொண்டு இருந்துள்ளார். இன்று இந்த சாகசத்தை நிகழ்த்தி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-க்கு பதிவு செய்துள்ளதாக மாணவியின் தாய் மாலா தெரிவித்தார்.