ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சையளிக்க தமிழகத்தில் டிசம்பர் 15-ம் தேதிக்குள் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு வரும் 30-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் காணொலிக் காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய அவர், நிவர் புயலின் தாக்கம் காரணமாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். அரசு அறிவித்த வழிமுறைகள் தவறாமல் பின்பற்றப்பட்டு வருவதால் கொரோனா தொற்றுப் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடிப் பழனிசாமி கூறியுள்ளார்.
கொரோனா தொற்றைத் தடுக்க மருத்துவ நிபுணர்குழு அளிக்கும் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இதுவரை ரூ.7 ஆயிரத்து 525 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் மினி கிளினிக்குகள் அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் கூறினார். மினி கிளினிக்குகளில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் நியமிக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இந்தியா டுடே நடத்திய ஆய்வில் தமிழகம் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்தைப் பிடித்து சிறந்த மாநிலமாக விருது பெற்றிருப்பதாக பெருமிதம் தெரிவித்த முதல்வர், சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.