மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் அரியலூர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி` மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.