கட்டுரைகள்

தடுப்பு மருந்துகளின் கதை | நோய் தடுப்பு மருந்துகள் (vaccines) எப்படி உருவாக்கப்படுகிறது!

‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது’ என்பது தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிநாதம். அதனைப்போலவே, ஒரு நோயினை குணப்படுத்தும் மருந்தோ அல்லது ஒரு நோய் வராமல் தடுக்கும் தடுப்பு மருந்தோ எதுவாயினும் அது மக்களின் பயன்பாட்டுக்கு வர சில ஆண்டுகள் ஆகலாம். அத்துணை நீண்ட நெடிய ஆராய்ச்சியின் நோக்கம், “ஓர் மருந்து, நோயினை குணமாக்கினால் மட்டும் போதாது, அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தி வேறு ஒரு நோயினை உண்டாக்கிவிடக்கூடாது” என்பதுதான்.

கடந்த நூறு ஆண்டுகளில் நம் தலைமுறை கண்டிராத பெருந்தொற்றாக அமைந்துள்ளது கொரோனா வைரஸ் தொற்று. ஒரு குறிப்பிட்ட பகுதியிலோ, நகரத்திலோ மட்டும் பரவும் நோயினை endemic என்றும், ஒரு குறிப்பிட்ட நாட்டில் மட்டும் பரவும் நோயினை epidemic என்றும், உலகம் முழுமையும் பரவும் நோயினை pandemic என்றும் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் இத்தொற்று கண்டறியப்பட்ட போதும், கொரோனா வைரஸ் ஒரு pandemic என உலக சுகாதார அமைப்பு கடந்த மார்ச் 11 தேதியன்று அறிவித்தது. 

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இருந்தபோதிலும், கொரோனா வைரஸின் மரபியல் மூலக்கூறு கடந்த ஜனவரி மாதமே கண்டறியப்பட்டு, கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தினை உருவாக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மருந்து ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் வேகமாக பயணிக்க தொடங்கியிருக்கின்றன. கடந்த வாரம் ஜெர்மனியின் BioNTech நிறுவனமும் அமெரிக்காவின் Pfizer நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி ஆரம்பகட்ட மனித பரிசோதனைகளில் நல்ல முடிவை தந்துள்ளதாக அறிவித்தன. தற்போது ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம், ‘கோவாக்ஸின்’ என்னும் தடுப்பு மருந்தின் ஆரம்பகட்ட பரிசோதனை முடிவுகள் நம்பிக்கையளிப்பதாக தெரிவிக்க, அதனை விரைவாக மனிதர்களுக்கு பரிசோதித்து ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR)அறிவுறுத்தியதாக செய்தி வெளியானது. 

இவ்வளவு குறுகிய காலத்தில் இது சாத்தியமா என கேள்விகள் எழுந்துள்ள நிலையில், ஓர் நோய்க்கான தடுப்பு மருந்து எப்படி உருவாகிறது என்பதனை விரிவாக பார்ப்போம்.


தடுப்பு மருந்துகளின் வரலாறு 
 

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நாடுகளில் பல்வேறு குழுக்களில் தடுப்பு மருந்து பயன்பாடு (immunisation) வழக்கத்தில் இருந்து வந்தாலும், 1796ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான எட்வர்ட் ஜென்னர், தான் உருவாக்கிய பெரியம்மை (smallpox) நோய்க்கான தடுப்புமருந்தை, 13 வயது சிறுவன் ஒருவனுக்கு செலுத்தி சோதித்து பார்த்ததில், அச்சிறுவனுக்கு பெரியம்மைக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் உருவானதை கண்டறிகிறார். 

அவர் கையாண்ட ஆராய்ச்சி மற்றும் மருத்துவமுறை உலகெங்கிலும் ஏற்கப்பட்டு, “தடுப்பு மருந்துகளின் தந்தை” என போற்றப்படுகிறார் எட்வர்ட் ஜென்னர். அடுத்த இருபது ஆண்டுகளில் பெரியம்மை நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருந்த போதிலும், பல்வேறு காரணங்களால் பெரியம்மையை ஒழிக்கும் நடவடிக்கைகள் தாமதமானது.     

1950களின் மத்தியில் உலக சுகாதார அமைப்பின் முயற்சியால்  வேகமெடுத்த பெரியம்மை ஒழிப்பு நடவடிக்கை, 1980ம் ஆண்டு அதன் இலக்கை எட்டியது. 

1980களின் இறுதியில் கண்டறியப்பட்ட போலியோ வைரஸ் படிப்படியாக ஒழிக்கப்பட்டு, 2014ம் ஆண்டு போலியோ இல்லாத நாடாக உருவெடுத்தது இந்தியா. 

ஆனால் 1980களின் தொடக்கத்தில் கண்டறியப்பட்ட ஹெச்ஐவி எய்ட்ஸ் வைரஸ் நோய்க்கு உலகம் முழுவதும் இதுவரை சுமார் மூன்று கோடிக்கும் அதிகமானோர் உயிரிழுந்துள்ள நிலையில், நான்கரை கோடிக்கும் அதிகமானோர் ஹெச்ஐவி எய்ட்ஸ் வைரஸ் தொற்றுடன் வாழ்ந்து வருகிற நிலையிலும், அதற்கான தடுப்பு மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை.   

1945ம் ஆண்டு கண்டறியப்பட்ட mumps வைரசுக்கு, அடுத்த நான்கு ஆண்டுகளில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. 1970ம் ஆண்டு வாக்கில் mumps வைரஸ் பெரும்பான்மையாக ஒழிக்கப்பட்டது.

தடுப்பு மருந்துகள் எப்படி உருவாகின்றன

Stage 1: Drug Discovery & Development 

ஒரு நோய்க்கான மருந்து, பல்வேறு மூலக்கூறுகளில் இருந்து உருவாக்கப்படுகிறது. எப்படி பாம்பின் விஷத்தை அதனை கொண்டே முறிப்பது போல, எப்படி வைரத்தை வைரத்தால் அறுப்பது போல, ஒரு நோயினை தடுக்கும் தடுப்பு மருந்து, அந்நோய் உண்டாக்கும் தீங்குயிரி மூலமே  உருவாக்கப்படுகிறது. குறிப்பிட்ட நோயினை உண்டாகும் தீங்குயிரியின் செல்களிலுள்ள புரதக்கூறு, மரபணுக்கூறு, போன்ற எண்ணற்ற பாகங்களில் இருந்து பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடத்தப்படும். இதில் எந்த வகையான வேதிப்பொருளுக்கு அதிக நோய் நீக்கும் மருத்துவ  குணமிருக்கிறதோ அதனை கண்டறிவது தான் முதல்நிலை. இந்த முதல் நிலை ஆராச்சியை செய்து முடிக்க குறைந்தது ஆறு முதல் பன்னிரண்டு மாத காலம் ஆகலாம். 

Stage 2: Pre-clinical Research (6 மாதம் – சில ஆண்டு காலம்)  

ஆரம்பகட்ட முதல்நிலை பரிசோதனைகளில் சாதகமான முடிவுகள் வரப்பெற்ற மருத்துவ குணமுடைய வேதிப்பொருளை  திசுக்கள், செல்கள், சோதனைக்கூட எளிய விலங்குகள் முதல் பாலூட்டிகள் வரை சோதித்து பார்த்தல் இரண்டாம் கட்ட ஆராய்ச்சி. இந்த இரண்டாம் கட்ட ஆராய்ச்சி ஆறு மாதம் முதல் சில ஆண்டுகள் வரை நீளும்.   

Stage 3: Clinical Research (Clinical Trials Phase 1,2,3,4)

திசுக்கள், செல்கள் மற்றும் விலங்குகளிடம் சோதிக்கப்பட்டு சாதகமான முடிவுகள் வரப்பெற்றபின், குறிப்பிட்ட அந்த வேதிப்பொருள் நான்கு நிலைகளில் மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கப்படும். 

Clinical trials Phase 1: நோய் அறிகுறியுள்ள / ஆரோக்கியமான நூற்றுக்கும் குறைவான தன்னார்வலர்களுக்கு, மருந்து செலுத்தப்பட்டு, மனித உடல் அந்த வேதிப்பொருளை எப்படி எடுத்துக்கொள்கிறது, எப்படி செரிமானம் ஆகிறது, உடலிலிருந்து  எப்படி வெளியேற்றுகிறது, எவ்வாறான வேதியல் மாற்றத்தை நிகழ்த்தி நோயினை குணப்படுத்துகிறது, எந்த அளவில், எந்த முறையில் கொடுப்பது, எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்பது குறித்து ஆராயப்படும். 

Clinical trials Phase 2: நோய் அறிகுறியுள்ள / ஆரோக்கியமான சில நூறு தன்னார்வலர்களுக்கு மருந்து செலுத்தப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். இந்த இரண்டாம் கட்ட சோதனையில், செலுத்தப்பட்ட மருந்தினால் யாருக்கேனும் ஒவ்வாமை அல்லது  வேறு ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா என்றும், அம்மருந்தின் செயல்திறன் குறித்து ஆராயப்படும். 

Clinical trials Phase 3: நோய் அறிகுறியுள்ள / ஆரோக்கியமான சில நூறு நபர்கள் முதல் சில ஆயிரம் தன்னார்வலர்களுக்கு, மருந்து செலுத்தப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். இந்த மூன்றாம் கட்ட சோதனையில், மருந்தின் செயல்திறன் மற்றும் பாதகமான எதிர்விளைவுகள் ஏதேனும் ஏற்படுகிறதா என்பது குறித்து  ஆராயப்படும். 

Clinical trials Phase 4: நோய் அறிகுறியுள்ள / ஆரோக்கியமான சில ஆயிரம் தன்னார்வலர்களுக்கு, மருந்து செலுத்தப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். இந்த நான்காம் கட்ட சோதனையில், பல்வேறு இனக்குழுக்களிலும் / பல்வேறு வயதுடையோரிடமும் / அனைத்து பாலினத்தினரிடமும் மருந்தின் செயல்திறன், பாதுகாப்பு, பாதகமான எதிர்விளைவுகள் உள்ளதா, என அனைத்தும் மீண்டும் ஆராயப்படும்.    

ஒரே மருந்து மனிதர்களின் உடல்நிலை, வயது, பாலினம், வாழும் பகுதி ஆகியவற்றால் வெவ்வேறான முடிவுகளை தருமாயின் அதனை அங்கீகரிக்க முடியாது என்பதாலேயே இதனை கட்ட சோதனைகள் நடத்தப்படுகின்றன. மனிதர்களிடம் பரிசோதித்து முடிவினை அறிய குறைந்தது ஓர் ஆண்டு முதல் சில ஆண்டுகள் ஆகலாம். 
         

Stage 4: Drug Approval (1-2 ஆண்டு காலம்) 

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து நிலைகள் ஒவ்வொன்றின் போதும், USFDA (USA), MHRA (UK), TGA (Australia), CDSCO (India), HEALTH CANADA (CANADA), World Health Organization (WHO), International Conference on Harmonization (ICH), என அந்தந்த நாடுகளில் உள்ள  அமைப்புகளிடம் முன்னனுமதி பெறுதல் அவசியம். ஒவ்வொரு நிலையிலும் பெறப்பட்ட தரவுகள் மற்றும் முடிவுகளை நுணுக்கமாக ஆராய்ந்த பின்னர், உரிய அமைப்புகள் அதற்கான ஒப்புதல் மற்றும் அனுமதியை பெற ஓர் ஆண்டு முதல் இரண்டாண்டுகள் ஆகலாம். 

Stage 5: Mass Production & Monitoring (Continuous process)

உரிய அமைப்புகளிடம் அனுமதி பெற்ற பின்னர் சிறந்த உற்பத்தி முறைகளை கையாண்டு, பெரிய அளவிலான உற்பத்தி மற்றும் வர்த்தக தயாரிப்பை தொடங்க அனுமதி பெற்ற பின்னர், குறிப்பிட்ட மருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும். சில ஆயிரம் நபர்களிடம் பரிசோதிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த மருந்துகள், உலகளவில் பயன்படுத்தப்படும் போது வேறு ஏதேனும் விளைவுகள் ஏற்படுத்துகின்றனவா என்று தொடர்ந்து கண்காணிக்கப்படும். மருந்தினை கண்டுபிடிக்கும் நிறுவனம் 
அறிவுசார் சொத்துரிமை பெற முடியும். 

ஓர் தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு வர குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஆகலாம். 

தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக சற்று விரைவாகவும், குறைந்த காலத்திலும் கூட உருவாக்கப்படலாம். 

ஒரு பெருந்தொற்றின் காரணமாக மக்கள் கொத்துக்கொத்தாக செத்துக்கொண்டிருக்கும் அசாதாரண சூழலில், அரசோ / அமைப்போ குறைந்தபட்சமாக, மருத்துவ குணமுடைய வேதிப்பொருளின் ளின் TOXICITY STUDIES, PHARMACO-DYNAMICS, PHARMACO-KINETICS, CLINICAL TRIALS உள்ளிட்ட சோதனை முடிவுகளை ஏற்றுக்கொண்டு, பெருந்தொற்று நோயிலிருந்து மக்களை காக்க, POSSIBLE BENEFITS OUTWAYS THE RISK என்ற அடிப்படையில் முடிவெடுப்பார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். 

இறுதியாக, ஒரு நோயினை குணப்படுத்தும் மருந்தோ அல்லது ஒரு நோய் வராமல் தடுக்கும் தடுப்பு மருந்தோ எதுவாயினும், பக்கவிளைவுகள் அல்லது பாதகமான எதிர்விளைவுகள் ஏதுமின்றி, கொரோனா போன்றதொரு பெருந்தொற்றிலிருந்து மக்களின் உயிர் காக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.  

*இக்கட்டுரையில் உள்ள குறிப்புகள் மற்றும் தகவல்கள், WHO, USFDA உள்ளிட்ட வலைதளங்களில் இருந்து பெறப்பட்டவை. 

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உண்மை கண்டறியும் சோதனை எப்படி நடக்கிறது?

Jayakarthi

தோனி அப்செட்டான அந்த ஒரு போட்டி: 2019 ஐபிஎல் ஃபைனல் ரீவைண்ட்

Halley Karthik

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தாலும் ஆபத்தா?

EZHILARASAN D

Leave a Reply