வேளாண் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளித்தும் இது தொடர்பாக இந்திய அரசிடம் பேசுமாறும் இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ரப்பிற்கு அந்நாட்டின் 36 எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆதரவு குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு ஏற்கனவே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவளித்திருந்த நிலையில் தற்போது இங்கிலாந்து எம்பிக்கள் 36 பேரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ரப்பிற்கு அந்நாட்டின் எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்த 36 எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதில் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ள புதிய வேளாண் சட்டங்கள் காரணமாக இந்தியாவில் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பிரிட்டனில் உள்ள சீக்கியர்களுக்கும் பஞ்சாப்புடன் தொடர்புடையவர்களுக்கும் கவலை அளிக்கிறது. பல பிரிட்டன் சீக்கியர்களும் இந்த விவகாரத்தில் கவலை அடைந்துள்ளனர். எனவே இந்த போராட்டம் குறித்து இந்திய அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.