ஜாதியில்லா சமுதாயத்தை நோக்கி செல்லும் போது, ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை ஏன் நடத்த வேண்டும் என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழகத்தில் 2020-21ம் ஆண்டு நடத்த உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பை, ஜாதி வாரியாக நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஆனந்தபாபு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, இடஒதுக்கீடு நடைமுறையை முழுமையாக அமல்படுத்த ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும் மனுதாரர் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.
மேலும், பல்வேறு சமுதாயங்களை சேர்ந்தவர்கள், தங்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க கோரி போராட்டங்கள் நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சில ஜாதிகள் சார்பில் தான் போராட்டங்கள் நடத்தப்படுவதாகவும், போராட்டங்களால் எதையும் அடைய முடியாது என்றும் குறிப்பிட்டனர்.
மேலும், ஜாதியில்லா சமுதாயத்தை நோக்கி பயணிக்கும் போது ஜாதி வாரி கணக்கெடுப்பு ஏன் நடத்த வேண்டும்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஜாதிவாரியாக புள்ளிவிவரங்களை சேகரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசியல் சாசனத்தின்படி, மனுவில் கோரியுள்ள கோரிக்கையை ஏற்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.