தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவின் பொதுக்குழு வரும் 9 ஆம் தேதி கூடுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் உட்கட்சி ஜனநாயகத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெறாத அதிமுக பொதுக்குழு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நாளை மறுநாள் நடைபெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிமுகவை பொறுத்த வரையில் சுமார் 3000 பேர் பொதுக்குழு உறுப்பினர்களாக இருக்கிறார்கள் . ஒரு கட்சியின் நிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் பொதுக்குழுவிடம் தான் உள்ளது. தேர்தல் நெருக்கத்தில் நடைபெறும் இந்த பொதுக்குழுவில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. தேர்தல் பரபரப்புக்கிடையே நடைபெற இருக்கும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள சில தீர்மானங்கள்
- அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தலா 2500 ரூபாய் வழங்கியதற்கும்,
- அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கி மருத்துவர் கனவை நினைவாக்கியதற்கும் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
- கச்சத்தீவை மீட்க வேண்டும், இலங்கை தமிழர்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம்
- அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியை வெற்றி பெறச் செய்வதற்கான தீர்மானம்
- மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சியமைக்க ஒன்றிணைந்து பணியாற்ற தீர்மானம்
- அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன
அதிமுக சார்பில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு அதற்காக உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல அதிமுகவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவுக்கான ஒப்புதல் மற்றும் அவற்றுக்கான அதிகாரங்களும் வரையறுக்கப்பட உள்ளன. எடப்பாடி பழனிசாமியை அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைக்க வேண்டும் என்ற வலியுறுத்தலும் மூத்த நிர்வாகிகள் மூலமாக வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களை போல இந்த சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று ஹாட்ரிக் சாதனை படைப்பதற்கு, வியூகம் வகுப்பதற்கான முன்னோட்டமாக தான் இந்த பொதுக்குழு அதிமுகவினரால் கருதப்படுகிறது.