சென்னையில் நிவர் புயல் பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை உட்பட பல வட கடலோர பகுதிகளில் கடந்த மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் நிவர் புயல் தாக்கியது. இதன் காரணமாக பெய்த கனமழையால், வேளச்சேரி, பள்ளிக்கரணை, முடிச்சூர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏராளமான வீடுகள், ஆயிரக்கணக்கான கால்நடைகள் சேதமடைந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், நிவர் புயல் ஏற்படுத்திய சேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஷ் அக்னி ஹோத்ரி தலைமையில் 7 பேர் கொண்ட குழு நேற்று மதியம் சென்னை வந்தது. வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி தமிழகத்தில் நிவர் புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினரிடம் அறிக்கையாக அளித்தார். மேலும் புயல் சேதங்கள் குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் மத்திய குழுவினருக்கு காண்பிக்கப்பட்டது.
அதை பெற்றுக்கொண்ட மத்திய குழு, இன்று சென்னையில் நிவர் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தனர். இந்த குழுவில், மத்திய சாலை போக்குவரத்து துறை, மீன்வள துறை, நிதி துறை உள்ளிட்ட 7 துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் இடம் பெற்றனர். இரண்டு குழுக்களாக பிரிந்த மத்திய குழு, தென் சென்னை மற்றும் வட சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புயல் பாதித்த பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இன்று சென்னையில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு, நாளை கடலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளை சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. அதை தொடர்ந்து டெல்லி செல்லும் மத்திய குழு, புயல் சேதங்கள் குறித்து அறிக்கை ஒன்றை தயார் செய்து அதை மத்திய அரசுக்கு வழங்க உள்ளது. அந்த அறிக்கையை வைத்து சேத மதிப்புகளை கணக்கிட்டு தமிழக அரசுக்கு புயல் நிவாரண நிதியினை மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.