சீன ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பு அடையாளமாக பார்க்கப்படுபவர் தலாய் லாமா. திபெத் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்ததால் சீனாவின் மிரட்டலுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சமடைந்து தர்மசாலாவில் வசித்து வருகிறார்.
அமைதி வழியில் திபெத் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற, சர்வதேச நாடுகளை நாடி வரும் தலாய் லாமாவுக்கு, 1989 ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தலாய் லாமா என்பது பெயரல்ல, அதுவொரு பதவி என்பதும், திபெத்தியர்களை வழிநடத்தும் தலைமை பொறுப்பு என்பதும் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திபெத்தை ஆக்கிரமித்த சீனாவின் மிரட்டலுக்கு எந்தவகையிலும் அடிபணியாமல், தொடர்ந்து அமைதி வழியில் போராடி வருகிறார் தலாய் லாமா.
1949ம் ஆண்டு முதல் திபெத்தை தனி நாடாக அறிவிக்க கோரி முழங்கி வருகிறார். இந்த சூழலில் தான், தலாய் லாமாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதை அடுத்து, 1958ல் நாட்டைவிட்டு வெளியேறினார். 1959ம் ஆண்டு மார்ச் மாதம், சுமார் 10 ஆயிரம் திபெத்தியர்களுடன் இந்தியாவில் தஞ்சமடைந்த தலாய் லாமா, 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருகிறார்.
தலாய் லாமாவை காரணம் காட்டி சீனா – இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வந்தாலும், அனைத்தையும் அமைதியாக எதிர்கொண்டு வருகிறது இந்தியா.
இந்தியா சுதந்திரமான நாடாக இருப்பதால், தன்னால் வெளிப்படையாக கருத்து தெரிவிக்க முடிகிறது, என மனந்திறந்து கூறியவர் தலாய் லாமா. செய்நன்றி மறவாத தலாய் லாமா, “உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நான் இந்தியன்” என பகிரங்கமாக அறிவித்துக் கொண்டார். மேலும், இந்திய – திபெத் உறவு, குரு-சீடர் உறவு போன்றது என பெருமிதத்துடன் குறிப்பிட்டவர் தலாய் லாமா
இந்தியாவில் தஞ்சமடைந்து 60 ஆண்டுகளை கடந்த நிலையில், தலாய் லாமாவின் உடல் தளர்ந்துவிட்டது. ஆனால், அவர் உள்ளத்தில் இன்னும் தளராத உறுதியுடன் ஒலித்துக் கொண்டிருக்கிறது, திபெத் தன்னாட்சி பகுதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை.
திபெத்திய மக்கள் என்றேனும் ஒரு நாள் விடுதலை காற்றை சுவாசிப்பார்கள், என்ற தளராத நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் தலாய் லாமா.